கமல் படங்கள் என்றாலே சர்ச்சைகள் அதிகம் என்றாகிவிட்டது. சர்ச்சைக்குரியவற்றை கமல் கையில் எடுக்கிறாரா அல்லது கமல் படங்களை வேண்டுமென்றே சர்ச்சையாக்குகின்றனரா என்று பிரித்துக் கூறமுடியாத அளவிற்கு போய்விட்டது. ஹேராம், விருமாண்டி என கமல் படங்களுக்கு எதிர்ப்புகள் வலுத்தாலும், கமல் வீதியில் இறங்கி போராட வேண்டிய படமாக விஸ்வரூபம் அமைந்தது. இந்நிலையில், கமல், உத்தமவில்லன் படத்தில் இந்துக்களை இழிவுபடுத்தி உள்ளார் என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
இது தொடர்பாக கமல் கூறுகையில், “இதுபோன்ற சர்ச்சைகளுக்கு நானே சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். ஒருவரின் காலை மிதித்தால் தானே மன்னிப்பு கேட்க முடியும். ஆனால், தற்பொழுது சிலர் எச்சரிக்கையாக முன்கூட்டியே கத்திவிடுகின்றனர். உத்தம வில்லன் படம் பார்த்துவிட்டு அனைவரும் சிரிக்கத்தான் போகின்றனர். ஆனால், அதற்குள்ளாக என்னை எதிர்ப்பதற்காக இந்து, முஸ்லிம் ஒன்றாகிவிடுவார்கள் போல் தெரிகிறது. காந்தியால் முடியாததை கமல் செய்ததாக இருக்கட்டும். ஆனால், அந்த எதிர்ப்புகள் அனைத்து அர்த்தமற்றவை.”
“வட இந்தியாவில் ஒரு அரசியல்வாதி, முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமை தேவையே இல்லை. அப்படிச் செய்தால், நாடு திருந்தி விடும் என்று கூறியபோது இங்கு யாரும் எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை. என்னை மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் ரஜினி போல் மனிதர்களை தெய்வங்களாகப் பார்ப்பதில்லை. மனிதனாக பார்ப்பதால், மனிதனுக்குள் இருக்கும் அத்தனை குரூரங்களையும் என்னிடம் காட்டுகின்றனர்” என்று கூறியுள்ளார்.