கோலாலம்பூர், ஏப்ரல் 23 – (மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான வழக்கில், 2009 மஇகா மத்திய செயலவையை மூன்றாவது தரப்பாக தலையிட அனுமதிக்கக் கோரி மஇகா உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணன் சமர்ப்பித்துள்ள மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனை முன்னிட்டு மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி வழங்கும் கண்ணோட்டம்)
மஇகாவில் உள்ள சிலர் தங்களின் பதவியைத் தற்காத்துக் கொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நீதிமன்றத்தில் சங்கங்களின் பதிவு இலாகா மீது தொடர்ந்த வழக்கால் அவர்களின் எண்ணத்தில் தொடர்ந்து மண் விழுந்து கொண்டேயிருக்கிறது.
அதாவது, அவர்கள் தொடுத்த வழக்கு இதுவரை முற்றுப்பெறவில்லை. தொடர்ந்து தேதி மாற்றங்களால் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மஇகா சார்பில் இவ்வழக்கிற்குள் நுழைந்து 2009 ஆண்டிற்கான நிர்வாகமே அடுத்த கட்ட நிர்வாகத்தை மேற்கொண்டு வழிநடத்தவும்,
கட்சியின் மத்திய செயலவையின் அனுமதியைப் பெறாமலேயே மேற்கொண்டிருப்பதால், அவர்களின் உறுப்பினர் நிலைப்பாடு குறித்து 2009-ஆம் ஆண்டுக்கான நிர்வாகம் கேள்வி எழுப்பியுள்ளது.
கட்சியின் நடப்பு உதவித்தலைவர்களில் ஒருவரான டத்தோ சரவணனும் 2009-ஆம் ஆண்டு மத்திய செயலவை உறுப்பினருமான கெடா ஆனந்தனும் கூட்டாகச்சார்பு செய்துள்ள மனுவை எடுத்துக்கொள்வதா? இல்லையா? என்பதற்கான தீர்ப்பு நாளை வழங்கப்படவிருப்பதால், இவ்வழக்கு மஇகாவினரிடையே மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.
பதிவு இலாகாவுக்கு எதிராக இவ்வழக்கைத் தொடுத்த தன்மானச் செம்மல்களில் சிலர், வழக்கு தொடர்நது ஒத்திவைக்கப்பட்டு வருவதால், மன சோர்வு அடைந்துள்ளனர். கடந்த 15-ஆம் தேதியோடு இவ்வழக்கு முற்றுப்பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இவ்வழக்கு அடுத்த மே 12-ஆம் தேதிக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சுமுகமான தீர்வு:
இதுவரை நான்கு முறை நடைபெற்றுள்ள இவ்வழக்கு, ஐந்தாவது முறைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
டத்தோஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம், சங்கங்களின் பதிவு இலாகா வழங்கியுள்ள கடிதப்படி 2009-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகத்தின் வழி புதிய தேர்தலை நடத்தி, நடப்பு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் உறுதியாகவும் தீவிரமாகவும் இருக்கிறார்.
ஆனால் பழனியோ! அப்படிச்சாத்தியப்படாது; 2013-ஆம் ஆண்டு தேர்ந்து எடுக்கப்பட்ட நிர்வாகமே புதிய தேர்தலை நடத்த உரிமையுள்ளது என்கிறார். இந்த அடிப்படையில் எழுந்த சர்சசையாலேயே இன்று நீதிமன்ற படிக்கட்டுகளில் வழக்கு உருண்டு விளையாடிக் கொண்டிருக்கிறது.
கயிறு இழுக்கும் போட்டியா?
இப்படி கயிறு இழுக்கும் போட்டிக்குக் கட்சியை கொண்டு வந்து நிறுத்தியிருப்பவர் பழனிதான் என்பதை அவர் இதுவரை ஒப்புக்கொண்டதாக தெரியவில்லை. 2013-ஆம் ஆண்டுக்கான தேர்தல் குழுத்தலைவராகயிருந்தவர் பழனிதானே. அவர் பொறுப்பேற்று நடத்தியது, மூன்று உதவித் தலைவர்களுக்கும், 23 மத்திய செயலவைக்குமான தேர்தலாகும்.
அவர் தேர்தல் குழுத்தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் போது எப்படி – எந்த அடிப்படையில் – தனக்கான ஓர் அணியையும்,பின்னர் வாக்களிக்கும் நேரத்தில், இவர் மேற்பார்வையில் திருத்தப்பட்ட மற்றொரு அணியும் பட்டியலிடப்பட்டு பேராளர்களிடம் வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்ல! இவரே ஓர் அணியை நிறுத்துவதென முடிவுக்கு வருவதாகயிருந்தாலும் தவறில்லை. ஆனால் இவர், தேர்தல் குழுத்தலைவர் பொறுப்பிலிருந்து விலகியிருக்க வேண்டும். அப்படியும் ஒரு முடிவுக்கு வராமல் தேர்தல் குழுவுக்குத் தலைவராகவும் தனக்குரிய அணிக்குத் தலைவராகவும் இருந்ததால் ,தேர்தலில் ஏகப்பட்ட தில்லுமுல்லு திருகுத் தாளங்களை அரங்கேற்றியிருக்கிறார்.
இவரே கொலையும் செய்வாராம்! இவரே நீதிபதியாகவும் இருப்பாராம்! இவரே காட்டையும் அழிப்பாராம் இவரே அதற்கு நெருப்பும் வைப்பாராம்! எப்படியிருக்கிறது பழனியின் ஐனநாயக மரபு? இவரின் இந்த விவேகமற்ற செயலால் கிட்டதட்ட கடந்த ஆறுமாதமாக மஇகா செயலற்று இருக்கிறது.
இந்த நிலை ஏன்?
2009-ஆம் ஆண்டுக்கான நிர்வாகம்தானே 2013-ஆம் ஆண்டுக்கான தேர்தலை மலாக்காவில் நடத்தியது. அப்போது அதற்கு பொறுப்பேற்று நடத்திய பழனிக்கு, இப்போது என்ன வந்தது? அதே 2009-க்கான நிர்வாகந்தானே தேர்தலை நடத்தப்போகிறது? அதற்கு ஏன் இத்தனை தடைகள்?
எனவே அவர் முதன் முதலாக பொறுப்பேற்று நடத்திய தேர்தலில் முறைகேடு என்றால் அதற்கு அவர்தானே பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதற்குரிய துணிச்சலையும் அவர் பெற்றிருக்க வேண்டும். அதற்காக, மறு தேர்தலை நடத்தச் சொல்லிய சங்கங்களின் பதிவு இலாகா கொடுத்த கடிதங்களை முன்னிலைப்படுத்தி அதற்கு எதிராக வழக்குப்போட வேண்டுமா? அப்படித்தொடுத்த வழக்கினால் கிடைக்கப் போகும் நன்மைதான் என்ன?
2013-ஆம் ஆண்டு, மலாக்காவில் நடத்தப்பட்ட தேர்தலில் தில்லுமுல்லு செய்து பழனியால் காப்பாற்றப்பட்ட சிலர் அதனால் தப்பித்துக்கொள்ளப் போகிறார்களா? சட்டத்தின் ஓட்டைகள் அதற்கு வழிவகுக்கப் போகிறதா? அதைத்தவிர வேறு என்ன கிடைத்து விடப்போகிறது?
ஆனால் இன்று கட்சியின் நிலை ஏறக்குறைய சவப்பெட்டியில் வைத்ததாகி விட்டது. ஓரு கட்சித்தலைவர் என்ற முறையில் பழனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், எப்படியெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியும்?
முதலில் மக்களால் பார்க்க முடியாத தலைவராக அவர் இருப்பது குற்றமில்லையா?
மஇகா என்ன கம்பெனியா? கட்சியா? கட்சி என்றால் ஒரு கட்சித்தலைவர் மக்களைச் சந்திப்பதும் மக்கள் தலைவரைச் சந்திப்பதும் நடைமுறையில் உள்ளதுதானே? அதற்காக மக்களைக் கண்டு மிரண்டு ஓடுகிற தலைவராகயிருப்பது மஇகாவுக்கு நல்லதா? கெட்டதா? என்பதைப் பற்றி பழனி என்றைக்காவது ஒருநாள் சிந்தித்தாரா?
அதோடுமட்டுமல்ல, கட்சி அலுவலகத்திலோ, அவரின் அமைச்சு அலுவலகத்திலோ, தட்டுத்தடுமாறி அவசர வேளைகளில் அவரின் வீட்டிலோ அறவே சந்திக்க முடியாத தலைவராகவும் அவர் இருந்து வருகிறார்.
தலைவராக வர ஆசைப்பட்ட பழனிக்கு; மஇகா மக்களுக்குரிய கட்சி என்று தெரியாதா என்ன? அன்றாட வாழ்கையில் பிரச்சனையில் மூழ்கி பிரச்சனையிலே வாழ்கிற ஒரு சமுதாயத்தின் தேவைகளும் அச்சமுதாயத்தை ஒட்டியுள்ள பின்னடைவுகளையும் அறியாமல் அல்லது புரியாமலா பழனி மஇகாவுக்கு தலைவரானார்?
அவருக்கு அமைச்சர் பதவி வேண்டும். அப்பதவி மூலம் கிடைக்கிற வருமானம் வேண்டும். ஆனால் மக்களிடையே உள்ள பிரச்சனையை மட்டும் சந்திக்க மாட்டார்? இப்படிப்பட்ட மனோபாவத்தில் ஊறிப்போன அவர் எதற்காக பதிவு இலாகாவை நீதி மன்றத்திற்கு இழுத்தார்?.
டத்தோ சோதிநாதனுக்காகவா?
தற்போது நடக்கின்ற போராட்டத்தைப் பார்த்தால் டத்தோ சோதிநாதனுக்காக நடக்கின்ற போராட்டம் போலவும், சோதியைத் துணைத் தலைவராகக் கொண்டு வர பழனிவேல் நடத்தும் போராட்டம் போலவும் ஆகிவிட்டது.
ஏன் அப்போது இல்லாத இந்த நல்லெண்ணம் இப்போது பழனியிடம் இருக்கிறது? அப்போது அவருக்கு தொகுதி வழங்காமல் போனதற்கு 2009-ஆம் ஆண்டு மஇகா துணைத்தலைவர் தேர்தலில், இடையிலே புகுந்து, மூன்றாவது நபராக போட்டியிட்டு பழனியின் வெற்றி வாய்பை கெடுக்க நினைத்த சோதியின் நல்லெண்ணத்திற்காகவா? அவருக்கு அப்போது தொகுதி வழங்காமல் பழனி போனார்?
அல்லது, இப்போது இருக்கிற நெருக்கடிக்கு சோதியின் சாதி அரசியல் தேவைப்படுகிறது என்ற நல்லெண்ணத்திற்காகவா? அல்லது 2009-ஆம் ஆண்டு மஇகா தேர்தல் பட்டியலில், சோதியின் பெயர் இல்லை என்பதற்காகவா? எதற்கு இந்த நீதிமன்ற நடவடிக்கை? யாருடைய சுயநலத்தில் யார் மஞ்சள் குளிக்க? இப்படியெல்லாம் அரசியல் விளையாட்டு!
2013ஆம் ஆண்டு கட்சித் தேர்தல் முடிந்து, சோதிநாதன் பழனிவேல் தயவால் உதவித் தலைவரான பின்னர், நான்கு செனட்டர்களை நியமிக்கும் வாய்ப்பு பழனிக்குக் கிடைத்தது. அதில் டத்தோ பாராட் மணியம், சிவபாக்கியம், டத்தோ ஜஸ்பால் சிங் ஆகிய மூவரை மறுநியமனம் செய்த பழனி, டத்தோ விக்னேஸ்வரனுக்கு புதிதாக செனட்டராக வாய்ப்பு தந்தார்.
அப்போதெல்லாம், சோதிநாதன், பழனியின் கண்களுக்கு தெரியாமல் போனது ஏன்? இப்போது தேர்தல் என்றவுடன் மட்டும் சோதிநாதன் பழனியின் கண்களுக்கு தெரிகின்றார்.
இந்த வழக்கால் கிட்டத்தட்ட 70 ஆண்டுகால மஇகா வுக்கு சவக்குழி அல்லவா வெட்டப்பட்டு இருக்கிறது?
அல்லது ஜொகூர் டத்தோ பாலகிருஷ்ணன் வெற்றியில், ஐயப்பாட்டை எழுப்பியிருக்கிற உண்மையான வெற்றியாளர் டத்தோ ஜஸ்பால் சிங்கின் நெற்றிக்கு ஒரேயடியாக பட்டை நாமம் போடவா?
அல்லது மேலும் பத்துக்கு மேற்பட்ட மத்திய செயலவை உறுப்பினர்கள் வெற்றியாளர்கள் என்று அறிவிக்கப்பட்டு இப்போது அது கேள்விக்குறியாகி இருக்கிறதே, அதை மறைக்கத்தான் மறுதேர்தலை நடத்தாமல் நீதிமன்றம் செல்லவேண்டி வந்ததா?
நீதிமன்றம் சென்று அதற்கு லட்சக்கணக்கில் பணம் செலவு செய்தும்; இதுவரை கண்டதென்ன? பத்து காசு செலவு செய்யாமல் தீர்ததுக்கொள்ள வேண்டிய இலகுவான ஒரு பிரச்சனைக்கு, நீதிமன்றம் சென்று இறுதியில் யார் மீசையில் மண் ஒட்டப்போகிறது?அல்லது யார் மீசையில் மண் ஒட்டாமல் இருக்கப்போகிறது என்பதை அறிந்து கொள்ளத்தானா?
இப்படி ஒவ்வொரு நடவடிக்கையில் என்ன செய்கிறோம் என்பதை பழனி சரியாக முறையாக தெரிந்துதான் செய்கிறாரா என்ற கேள்வி தொத்தியிருக்கும் வேளையில்தான் அவர் அடுத்து நீதிமன்ற நடவடிக்கையில் தனக்கு சாதகமான தீர்பபு வரும் என்று எதிர்பார்க்கிறார்.
அதாவது 2009-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகமே தொடர வேண்டும் என்று திட்டவட்டப்படுத்தும் வகையில் பதிவு இலாகா மஇகாவுக்கு எதிராக வழங்கியுள்ள கடிதத்தை மீட்டுக்கொள்ள நேர்ந்தால், 2013-ஆம் ஆண்டுக்கான தேர்தல் செல்லும்படியாகி விடும். அத்தகைய நிலையேற்படுமேயானால், தேர்தல் முறைகேடுகள் குறித்த தவறுகள் திருத்தப்பட, பதிவு இலாகா மீண்டும் மஇகாவை ஒரு சமயம் கேட்டுக்கொள்ளலாம்.
அப்படியொரு நிலை ஏற்பட்டால், அதன் பின் அத்தவறுகள் திருத்தப்பட்டு பதிவு இலாகாவில் புதிய விபரங்கள் வழங்கப்படலாம், அத்திருத்தத்தை பதிவு இலாகா ஏற்றுக்கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்கக வேண்டும்.
இத்தகைய சூழல் ஒருபுறம் நடைபெற்றாலும், அதை முன் வைத்தே பழனி 2016 வரை பதவியில் நீடித்துவிடலாம் என்று தெரிகிறது. அதோடு மட்டுமல்ல தனது அரசியல் எதிரிகளை இந்த இடைவெளிக்குள் ஒழித்துக்கட்டிவிடலாம் என்றும் நினைக்கிறார்.
இதனால் மேலும் கட்சியில் கடும் குழப்பம் ஏற்படவே செய்யும். ஏற்கனவே பலரை நீக்கிவிட்டு, அந்நீக்கம் செல்லுமா? செல்லாதா? என்ற குழப்பத்தில் வேறு பழனி இருக்கிறார். இப்படி அடுக்கடுக்கான குழப்பத்தில் மூழ்கிப்போய் இருக்கும் பழனிக்கும் அவரின் தற்காலிக நண்பர்கள் என அடையாளப் படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கும் நாளை நடக்கப்போகும் வழக்கின் போக்கு அவர்கள் எதிர்பார்க்காத இன்னொரு திசையை நோக்கி திசை திருப்பிவிடப்படலாம்.
இதனால் பழனியின் தற்போதைய கூட்டணியினரின் எதிர்கால கனவுகள் களையப்படலாம். அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கான வலுவான காரணத்தை பழனி நாளைய தீர்பபில் உணரலாம் என்று சில சட்டமேதைகளும் அரசியல் மேதைகள் எதிர் பார்ப்பதாக தெரிகிறது.
-பெரு.அ.தமிழ்மணி
(இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளர் பெரு.அ.தமிழ்மணியின் சொந்த, தனிப்பட்ட கருத்துகளாகும். அந்தக் கருத்துகள் செல்லியலின் கருத்துகளோ, செல்லியலைப் பிரதிபலிக்கும் கருத்துகளோ அல்ல. கட்டுரையாளரின் கருத்துகளுக்கு செல்லியல் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.
இந்த கட்டுரையையோ, அல்லது அதன் பகுதிகளையோ மறுபிரசுரம் செய்ய வேண்டுமென்றால், கட்டுரையாளரை நேரடியாகத் தொடர்பு கொண்டு அனுமதி பெறவேண்டும்.
தமிழ்மணியின் மற்ற எழுத்துப் படிவங்களை maravan madal tamil mani என்ற முகநூல் (பேஸ்புக்) அகப்பக்கத்தில் காணலாம். அவரைப் பின்வரும் இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:
wrrcentre@gmail.com