Home நாடு சேம நிதிப்பணம் மீட்பு வயது வரம்பு சர்ச்சை நஜிப் அறிவிப்பால் முடிவுக்கு வந்தது!

சேம நிதிப்பணம் மீட்பு வயது வரம்பு சர்ச்சை நஜிப் அறிவிப்பால் முடிவுக்கு வந்தது!

730
0
SHARE
Ad

NAJIB-RAZAK-04கோலாலம்பூர், ஏப்ரல் 26 – கடந்த சில நாட்களாக பொதுமக்களிடையே பலத்த சர்ச்சையையும், விவாதங்களையும் எழுப்பியிருந்த சேமநிதி பணத்தை மீட்பதற்கான வயது வரம்பு விவகாரம் ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

சேமநிதிப் பணத்தை முழுமையாக மீட்டுக்கொள்ளும் வயது 55 என்பது எப்போதும் நிலைத்திருக்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்ததைத் தொடர்ந்து மலேசியர்கள் நிம்மதிப் பெருமூச்சை விட்டனர்.

பொதுமக்களின் கருத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டு மேற்கண்ட அறிவிப்புச் செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சேமநிதி வாரியம் நடத்திய கருத்துக் கணிப்பில் பெரும்பாலோர் பணத்தை மீட்பதற்கான வயது வரம்பு 55 ஆக இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர். இந்த கருத்துக் கணிப்புதான் அரசாங்கம் தன் முடிவிலிருந்து பின்வாங்குவதற்கு வழிவகுத்துள்ளது.

இரண்டு நாட்களில் கணினி மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலேசியர்கள் பங்கெடுத்திருந்தனர்.

ஏற்கனவே, 1எம்டிபி பிரச்சனையில் நஜிப் மீதும், அரசாங்கம் மீதும் மக்களுக்கு எழுந்திருக்கும் வெறுப்புணர்வு, சேமநிதி வயது வரம்பு பிரச்சனையால் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தினாலும், புதிய விதிமுறையை அமுல்படுத்தாமல் அரசாங்கம் பின்வாங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

“இந்த அரசாங்கம் எப்போதுமே மக்களின் கருத்தைக் கேட்கும் அரசாங்கமாகும். பெரும்பான்மையான சேமநிதி வாரிய சந்தாதாரர்கள் 60 வயதை அடைந்து வேலை ஓய்வு பெறும்போது அந்தச் சேமிப்புப் பணம் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருந்த போதிலும் அவர்கள் தங்கள் சேமிப்பு நிதியை 55 வயதில் பயன்படுத்தும் உரிமையை விரும்புகின்றனர்” எனவும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

சிங்கப்பூரில் சேமநிதிப் பணத்தை முழுமையாக மீட்பதற்கான வயது வரம்பு 65 ஆகும்.