கொழும்பு, ஏப்ரல் 27 – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, 24 மணிநேரப் பயணமாக வரும் சனிக்கிழமை மே 2-ஆம் தேதி கொழும்புக்கு செல்ல உள்ளதாக, இலங்கை வெளிவிவகார அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.
1972-ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த, வில்லியம் பியேர்ஸ் ரோஜர் மேற்கொண்ட பயணத்துக்குப் பின்னர், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் முதலாவது அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி ஆவார். வரும் சனிக்கிழமை கொழும்பு செல்லும் ஜான் கெர்ரி மறுநாள் அமெரிக்கா செல்வார்.
அவர், இலங்கையில் தங்கியிருக்கும் போது, அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்ளிட்டோரைச் சந்திக்கவுள்ளதுடன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடனான பேச்சுக்களையடுத்து, ஊடகச் சந்திப்பு ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளார்.
இவர் கொழும்புடன் பயணத்தை நிறுத்தமாட்டார் என்றும், பௌத்த விகாரை ஒன்றுக்குச் சென்று பந்தலை திறந்து வைப்பார் என்றும், கொழும்பில் அமெரிக்க தூதரகத்துக்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.