Home Featured நாடு மலேசியத் திருநங்கை நிஷா ஆயுப்புக்கு அமெரிக்காவில் அனைத்துலக ‘வீரமங்கை’ விருது!

மலேசியத் திருநங்கை நிஷா ஆயுப்புக்கு அமெரிக்காவில் அனைத்துலக ‘வீரமங்கை’ விருது!

1404
0
SHARE
Ad

nisha_ayub_screencap2903a_620_412_100கோலாலம்பூர் – மலேசியாவில் திருநங்கைகளின் உரிமைகளுக்காகப் போராடி வருபவரான நிஷா ஆயுப், 2016-ம் ஆண்டிற்கான அனைத்துலக ‘வீரமங்கை’ விருதைப் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் இந்த அனைத்துலக ‘வீரமங்கை’ விருதைப் பெறும் முதல் திருநங்கைப் பெண் என்ற பெருமையையும் நிஷா ஆயுப் பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு மலேசியாவைச் சேர்ந்த முன்னாள் பெர்சே 2.0 அமைப்பின் தலைவர் டத்தோ அம்பிகா ஸ்ரீனிவாசனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

உலக அளவில் அமைதிக்காகவும், நீதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், ஆண் – பெண் சம உரிமைக்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் துணிச்சலுடன் போராடும் பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகின்றது.

நேற்று அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற இந்த விருது விழாவில் அனைத்துலக அளவில் 14 வழக்கறிஞர்கள், போராட்டவாதிகள், மனிதாபிமானிகள் மற்றும் சீர்திருத்தவாதிகளுக்கு, “அனைத்துலக வீர மங்கை” விருது வழங்கப்பட்டது.

“14 தலைவர்கள், 14 முன்மாதியாளர்கள், 14 வீரப் பெண்மணிகள், ஒரே தெள்ளத் தெளிவான செய்தி” என்று அவ்விருதை அவர்களுக்கு வழங்கிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

தற்போது 47 வயதாகும் நிஷா, மலேசிய திருநங்கைகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றார்.

கடந்த 2005-ம் ஆண்டு, நிஷா மாற்றுச்சட்டை அணிந்ததற்காக, ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்ட போது, அங்கிருந்த மற்ற கைதிகள் மற்றும் பாதுகாவரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார்.

தனக்கு ஏற்பட்ட அந்தக் கொடூர அனுபவங்களுக்குப் பின்னர், அரசு சாரா இயக்கங்களை நிறுவி அதன் மூலம் பல திருநங்கைகளுக்கு அடிப்படை உரிமைகள் மற்றும் நல்வாழ்விற்காகப் போராடி வருகின்றார்.

நேற்று ஜான் கெர்ரியிடமிருந்து அவ்விருதைப் பெற்றுக் கொண்ட பிறகு பேசிய நிஷா, “இந்த விருது எனக்கானது மட்டுமல்ல, எல்லா திருநங்கைகளுக்கானதும் கூட. பெண்களுக்காக வழங்கப்படும் இந்த அனைத்துலக விருதுக்கு நம்மைப் போன்றவர்களும் அங்கீகரிக்கப்பட்டுவிட்டோம், ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டோம் என்பதைக் காட்டுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.