பெஷாவர், ஏப்ரல் 27 – பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர்பக்துன்கவா மாகாணத்தில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக அங்குள்ள பெரும்பாலான வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
நூற்றுக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் விளம்பர பலகைகள் கூண்டோடு சாய்ந்தன. மணிக்கு 120 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதனால் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தற்போது வரை மழைக்கு 39 பேர் பலியாகினர். 214 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பெஷாவரில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் பெஷாவர், சர்சத்தா, நவுஷெரா உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக நகர் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.
மழை மேலும் பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், பெஷவரில் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மீட்பு பணிகளுக்கு படைகளை அனுப்பியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. பலியானவர்கள் குடும்பங்களுக்கு கைபர் பக்துன்கவா மாநில முதல்வர் பெர்வேஷ் கட்டாக் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.