கோலாலம்பூர், ஏப்ரல் 27 – ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில், மலேசியாவின் உலகப் புகழ்பெற்ற தேசிய பூப்பந்து விளையாட்டாளர் லீ சோங் வெய்க்கு, 8 மாதங்கள் விளையாட தடை விதித்திருக்கின்றது உலக பூப்பந்து கூட்டமைப்பு (Badminton World Federation).
என்றாலும், இந்த தண்டனை காலம் கடந்த வருடம் ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் தொடங்குவதால் இம்மாதத்தோடு 8 மாதங்கள் நிறைவடைந்து, எதிர்வரும் மே 1-ம் தேதி முதல் சோங் வெய் விளையாடத் தகுதியானவராகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், வரும் மே 10 முதல் 17 வரை டொங்குவானில் நடைபெறவிருக்கும் சுதிர்மேன் கோப்பை, சிங்கப்பூரில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள எஸ்இஏ விளையாட்டுகள் மற்றும் ஜகார்த்தாவில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உலக சேம்பியன்ஷிப் ஆகிய மூன்று முக்கிய விளையாட்டுப் போட்டிகளில் லீ சோங் வெய் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் புத்ராஜெயா அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதின் இந்த தகவலை செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.