Home இந்தியா “ஆனந்த விகடன்” ஓவியர் கோபுலு காலமானார்!

“ஆனந்த விகடன்” ஓவியர் கோபுலு காலமானார்!

1416
0
SHARE
Ad

சென்னை, மே 1 – தமிழகத்தின் வாரப் பத்திரிக்கைகளின் முக்கிய அங்கம் சில ஓவியர்களின் மறக்க முடியாத ஓவியங்கள். அதிலும், ஆனந்த விகடன் வாரப் பத்திரிக்கையின் மூலம் உலகம் எங்கும் தமிழ் வாசகர்களுக்கு தங்களின் மறக்க முடியாத ஓவியங்களின் மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் முக்கியமானவர் ஓவியர் கோபுலு.

Gopulu Artist

ஓவியர் கோபுலு (படம் : நன்றி – விகடன் இணையத் தளம்) 

#TamilSchoolmychoice

பிரபல ஓவியரான கோபுலு, உடல் நிலை சரியில்லாமல் கடந்த 27-ம் தேதி சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,. ஆனால், சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 29ஆம் தேதி,  இரவு 7.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

நகைச்சுவை ததும்பும் – பல்வேறு தரப்பட்ட கதை நாயகர்களையும், சிறுகதைகள், நாவல்களின் கதாபாத்திரங்களையும் கண் முன்னே உலவ விட்டவர் கோபுலு.

எஸ்.கோபாலன் என்ற இயற்பெயர் கொண்ட கோபுலுவின் மனைவி ஏற்கனவே காலமாகி விட்டார். அவரது ஒரே மகன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

கோபுலு, தஞ்சாவூரில் 1924-ம் ஆண்டு பிறந்தார். ஆனந்த விகடன் தொடங்கிய காலத்தில் ஓவியராக பணியாற்றிய மாலி, ஓவியர் கோபுலுவை ஆனந்த விகடன் பணியில் சேர்த்தார் என விகடன் இணையத் தளம் வெளியிட்ட குறிப்பு தெரிவிக்கின்றது.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது, அதை கொண்டாடும் விதமாக ஆனந்த விகடன் அட்டைப் படத்தை கோபுலுதான் வரைந்தார்.

ஆனந்த விகடனில் வெளிவந்த ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘துப்பறியும் சாம்பு’ போன்ற பல்வேறு தொடர்கதைகளுக்கும், கோபுலுதான் ஓவியங்களை வரைந்தார். அரசியல் கேலிச் சித்திரங்களையும் (கார்ட்டூன்) அவர் படைத்தார்.

 கருணாநிதி இரங்கல்

ஓவியர் கோபுலு மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, நேற்று  (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ஓவியத்தின் மூலம் புதுமையைப் புகுத்தி, அழியாப் புகழ் பெற்ற கோபுலு மறைவால் பெரிதும் துயருற்றேன். நான் எழுதிய குறளோவியம், சங்கத்தமிழ், பொன்னர்-சங்கர் போன்ற புதினங்களுக்கு அவர்தான் ஓவியம் தீட்டினார்” என நினைவு கூர்ந்துள்ளார்.

ஜெயகாந்தனின் “சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்ற தொடர் கதைகளுக்கு வாரம்தோறும் அவர் தீட்டிய ஓவியங்கள் காலத்தால் அழியாதவை.

“கோபுலு மறைந்தாலும், அவர் வரைந்த ஓவியங்கள் இன்னும் பல ஆண்டுகள் நிலைத்திருக்கும்” என்றும் கருணாநிதி தனது இரங்கல் உரையில் தெரிவித்துள்ளார்.