Home அவசியம் படிக்க வேண்டியவை திரைவிமர்சனம்: உத்தம வில்லன் – உன்னத கலைஞன் என்றென்றும்..

திரைவிமர்சனம்: உத்தம வில்லன் – உன்னத கலைஞன் என்றென்றும்..

1082
0
SHARE
Ad

kamal-haasan_142113139970கோலாலம்பூர், மே 1 – “சாகாவரம் போல் சோகம் உண்டோ? – தீரா கதையை கேட்பார் உண்டோ?” – மரணம் யாருக்கும் எப்போது வேண்டுமானால் வரலாம். அதற்கு அரசன் முதல் ஆண்டி வரை எல்லாம் ஒன்று தான்.

மரணம் வருவதை தடுத்து நிறுத்திக் கொள்ள முடியாத மானிடம், அது வருவதற்குள் தன் உயிரை மற்றொரு படைப்பில் புகுத்திக் கொள்ள முடியும். கலைஞன் அழிந்தாலும் அவன் உருவாக்கிய கலை அழிவதில்லை.

இதை உணரும் புகழ்பெற்ற சினிமா கதாநாயகனான மனோரஞ்சன் (கமல்) தனக்கு பல வெற்றிப்படங்கள் கொடுத்து ஆளாக்கி விட்ட இயக்குநர் மார்க்கதரிசியுடன் (பாலச்சந்தர்) இணைந்து உருவாக்கும் படம் தான் உத்தம வில்லன்.

#TamilSchoolmychoice

உத்தம வில்லன் இந்த உலகிற்கு சொல்ல வருவது என்ன? மனோரஞ்சன் தன் முயற்சியில் வெற்றியடைந்தாரா? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரமேஷ் அர்விந்த்.

நடிப்பு

கமல் படத்தில் நடிப்புக்கா பஞ்சம்? – மூத்த நடிகர் கே.விஸ்வநாத், பாலச்சந்தர், நாசர், ஜெயராம், ஊர்வசி, ஆண்ட்ரியா, எம்.எஸ்.பாஸ்கர், பூஜா குமார், பார்வதி, பேராசிரியர் ஞானசம்பந்தம் என ஒவ்வொருவரும் தங்களது கதாப்பாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார்கள்.

uthama-villain-teaser

கமல் …அப்பப்பா… ஒருபுறம் மனோரஞ்சன் கதாப்பாத்திரத்தில் ஒரு புகழ்பெற்ற நடிகனாக, ரசிகர்கள் முதல் தன் குடும்பத்தினர் வரை சமாளிப்பதாகட்டும், உத்தமன் கதாப்பாத்திரத்தில் தெய்யாட்டக் கலைஞராக தலையில் அவ்வளவு பெரிய கிரீடங்களை சுமந்து, ஒப்பனையுடன் ஆடுவதாகட்டும் 60 வயதிலும் கடுமையான உழைப்பை காட்டியிருக்கிறார்.

அதே நேரத்தில், ஆண்ட்ரியாவுடன் முத்தம், ஊர்வசியுடன் கொஞ்சல், பூஜாவுடன் தடவல்கள் என சதிலீலாவதியும் செய்திருக்கின்றார் இந்த இளைஞர்…

????????????????????????????????????????????????????????

இயக்குநர் பாலச்சந்தர்.. பேச்சு மற்றும் நடிப்பில் நாகேஷை மீண்டும் பார்த்தது போல் இருந்தது. ஒரு பேட்டியில் கமல் சொன்னது ஞாபகம் வருகிறது. உத்தம வில்லன் படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு குழுவில் இருந்த இளைஞர் ஒருவர் கேட்டராம் ஏன் சார் பாலச்சந்தர் சார் நாகேஷைப் போல் காப்பியடித்து நடிக்கிறார் என்று. அதற்கு கமல் உட்பட யூனிட்டில் இருந்த மூத்த நடிகர்கள் அனைவரும் சிரித்துவிட்டனராம். காரணம் நாகேஷை அறிமுகப்படுத்தியதே பாலச்சந்தர். கடைசி வரை நாகேஷ் அவர் கற்றுக்கொடுத்த பாணியில் தான் நடித்துக் கொண்டிருந்தார் என்று கமல் அப்பேட்டியில் சொல்லியிருப்பார். அதை உத்தம வில்லன் படத்தில் நன்றாக உணர முடிந்தது.

படத்தில் பாலச்சந்தருக்கும், கமலுக்கு இடையிலான அந்த 1 நிமிட கதை சொல்லும் காட்சி அடடா… “கதை என்ன வெறும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டா? என்று கமலை கோபத்துடன் கேட்பது, கமல் கதை சொல்லியவுடன்,”என்னடா.. பல காலமா தமிழ் சினிமாவுல காட்டி காட்டி புழுத்துப்போன கதைய சொல்ற.. இந்த கதையை நான் இயக்கி நீயே ரெண்டு மூன்று படம் நடிச்சிருக்கியே?” என்று கிண்டல் அடிப்பது.. பின்னர் “எவ்வளவு நாள் டைம் குடுப்ப?” என்று கமலிடம் கேட்டுவிட்டு, “ஐயோ… ஐயம் ரியலி சாரி மை பாய்” என்று கலங்குவதுமாக கமலின் மீதான பாசத்தை நிஜமாகவே திரையில் காட்டியிருக்கிறார் இயக்குநர் சிகரம்.

இவர்களைத் தவிர கதையில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றார்கள்.

இந்த படத்தில் நாசர் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் நாசரின் மகன் எதிர்பாராத விதமாக மிகப் பெரிய கார் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் கூட, நாசர் தனது நகைச்சுவைக் கதாப்பாத்திரத்தில் மிக இயல்பாக நடித்துக் கொடுத்திருக்கின்றார். உண்மையில் நாசரின் நடிப்பு அற்புதம்.

திரைக்கதை, வசனம், பாடல்கள்

கதைக்குள் கதை பாணியிலான திரைக்கதை அமைப்பில் மிக அழகாக நிஜத்தையும், சினிமா கதைக்குள் புராண காலத்தையும் சொல்லி கலைஞனையும், மரணத்தையும் ஒப்பிட்டு முடிவு சொல்லியிருக்கிறார்கள்.

நிஜத்தில் தன் மகளுக்கும், மகனுக்கும் வில்லனாகத் தெரியும் சினிமா கதாநாயகன் மனோரஞ்சன் உத்தமன். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தன் காதலை தவறவிட்டவன் என்கிறது போல் நகரும் கதை. ஆனால் அவன் நடிக்கும் சினிமா கதையில் அவன் பெயர் உத்தமன் ஆனால் வஞ்சகமாக சாகாவரம் பெற்றவன் போல் நடித்து எதிரியை வீழ்த்தும் வில்லன்.

uthama-villain_142528961780

நிஜம் மற்றும் புராணக் கதையின் இணைப்பு மிகச் சரியாக உள்ளது. அலுப்பு தட்டவில்லை. புராணக் கதைக்குள் சென்று சற்று நேரம் சிரித்து இளைப்பாறி விட்டு ரசிகர்கள் நிஜத்துக்கு வரும் போது சோகம். மீண்டும் புராணக்கதைக்குள் சிரிப்பு என மாறி மாறி இழுத்துச் சென்றிருக்கின்றது திரைக்கதை.

கமல் பேசும் ஒவ்வொரு வசனமும் டான் ..டான் என மணி அடித்தது போல் அடி நெஞ்சில் ஆழமாக இறங்குகின்றது. “என் உதிரத்தின் விதை,என் உயிர் உதிர்த்த சதை, வேறொருவனை பகைவன் என பொறுத்திடுவேனா?” என்ற கணீர் குரல் திரையரங்கை விட்டு வெளியேறினாலும் காதை விட்டு அகலவில்லை.

“பூங்கொடியில் பலாப்பழம் போல் தொங்கிக் கொண்டிருக்கின்றேன்” என வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வசனங்களும் படத்தை தாங்கி நிற்கின்றது.

கடைசிக் காட்சியில் “பக்கும்.. பகபகபக” என எமன் வருவது போல் நிழலை மறைமுகமாகக் காட்டியிருப்பது அற்புதம். அதை கவனித்தவர்களுக்கும், புரிந்துகொண்டவர்களுக்கும் மெய்சிலிரிக்கப் போவது நிச்சயம்.

உத்தமவில்லன் பாடல் வரிகளைப் படித்து புரிந்து கொள்ளும் ஆற்றல் இருந்தால், அதில் படத்தின் ஒட்டுமொத்த கதையும் அடங்கி உள்ளது. அத்தனை வரிகளையும் கமலே எழுதியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

அனைத்துப் பாடல்களும் இனிமை.. காட்சிகளோடு சேர்ந்து கேட்கும் போது அர்த்தம் புரிந்து ரசிக்க வைக்கின்றது.

ஒளிப்பதிவு மற்றும் கிராபிக்ஸ்

சம்டத் சைனுதின் ஒளிப்பதிவு நிஜ கதையிலும், புராணக் கதையிலும் கண்களுக்கு விருந்து.

அதுவும் அந்த ஷாப்பிங் மாலில் வைக்கப்பட்டிருக்கும் முதல் காட்சியே மிகப் பிரம்மாண்டம். அவ்வளவு கூட்டத்தில் கேமரா வைப்பது அவ்வளவு எளிதல்ல.. ஆனால் அந்த காட்சி மிகச் சிறப்பாக வந்திருக்கின்றது.

புராண காலக் கதையிலும் லேசான மஞ்சள் கலந்த வண்ணத்தில் காட்சிகள் ரசிகர்களுக்கு வேறு ஒரு கதை என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.

என்றாலும், பாம்பு, புலி, முதலை என கிராபிக்ஸ் ஏனோ கண்களை உறுத்துகின்றது. அண்மையில் வெளிவந்த பல படங்களில் கிராபிக்ஸ் மிகத் தத்ரூபமாக வந்திருக்கும் நிலையில், இந்த படத்தில் கிராபிக்ஸ்-ல் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

uthama-villain-expectation-analysis-700x417

மற்றபடி, படம் தொடங்கியது முதல் முடிவு வரை விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை. சஸ்பென்ஸ் உடைந்து விடக்கூடாது என்பதால் பல விசயங்களை நேரடியாக இங்கே விமர்சிக்க முடியவில்லை.

ஒரு விசயம் மட்டும் நினைக்கும் பொழுது மெய்சிலிக்கின்றது… தன் குரு பாலச்சந்தருக்கு, கமல் என்ற உன்னத கலைஞன் காணிக்கையாக செலுத்தியுள்ள படம் தான் உத்தமவில்லன்.

அது எப்படி தற்செயலாக நடந்ததா? அல்லது பாலச்சந்தர் மறையப்போகிறார் என்று கமலுக்கு தெரிந்ததா? என்று தெரியவில்லை. ஆனால் கடைசியாக பாலச்சந்தரை ஒரு கனமான கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்து, அவரை வைத்தே,

“விதைத்திடும்
மெய் போல் ஒரு உயிரை
உயிர்த்து விளங்கும்
என் கவிதை விளங்கும்
கவிதை விளங்கும்…

விழுங்கி துலங்கிடும்
வம்சம் வாழ
வாழும் நாளில் கடமை செய்ய
செய்யுள் போல் ஒரு
காதல் வேண்டும்
காதல் வேண்டும்
செய்யுள் போல் ஒரு- காதல் வேண்டும்”

என பல உள்ளார்ந்த விசயங்களை உத்தமனாக, வில்லனாக மாறி மாறி ரசிகர்களுக்கு உணர வைத்துள்ளார் உலகநாயகன்.

படத்தில் பாலச்சந்தர் விஸ்வநாதனிடம் சொல்கிறார், “ஒரு காட்சியில நடிச்சிருக்கான் பாருங்க.. அப்பப்பா… என் சிஷ்யன்… என் சிஷ்யன்”.

படம் வெளியாகி இன்று அதை நேரடியாக கமலிடம் சொல்வதற்கு பாலச்சந்தர் இல்லை என்பது தான் சோகம்.

உத்தம வில்லன் – தவறாமல் திரையில் பார்க்க வேண்டிய ஒரு காவியம்.

ஃபீனிக்ஸ்தாசன்