சென்னை, மே 1 – மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகவிருந்த கமலஹாசனின் ‘உத்தம வில்லன்’ படத்தின் காலைக் காட்சிகள் இன்று சென்னையில் ரத்தாகியுள்ளது தமிழகம் முழுவதும் கமல் ரசிகர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று வெளியாகவிருந்த இந்தப் படத்தின் முதல் காட்சிகள் காலை 8.00 மணி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு அனுமதிச் சீட்டுகளும் விற்கப்பட்டிருந்தன.
இருப்பினும், இன்றைய காலைக் காட்சிக்கு முன்கூட்டியே அனுமதிச் சீட்டு வாங்கிவிட்டு, சென்னையில் உள்ள ஐநாக்ஸ் (விருகம்பாக்கம்) திரையரங்குக்கு சென்ற செல்லியல் வாசகர் ஒருவர், இன்றைய காலைக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதாகவும், படத்தின் தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் சம்பந்தப்பட்ட பிரச்சனையின் காரணமாக படத்தின் திரையீடு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருப்பதாகவும் செல்லியலிடம் தொலைபேசி வழி தெரிவித்தார்.
சென்னையில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கின் முன் உத்தம வில்லன் காலைக் காட்சி ரத்தானதால் ஏமாற்றத்துடன் காத்திருக்கும் இரசிகர்கள்
தமிழகம் முழுவதும் உத்தம வில்லன் திரைப்படம் எதிர்பார்த்தபடி இன்று காலைக் காட்சியில் திரையீடு காணவில்லை என்றும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இருப்பினும் அடுத்த காட்சிகள் இன்று (1 மே) காலை 11 மணிக்கு மேல் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்குள் தயாரிப்பாளர் பிரச்சனைகள் முடிந்து படம் திரையீடு காணும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதாகவும் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் சினிமா இரசிகர்களிடத்திலும், குறிப்பாக கமல் ரசிகர்களிடையே அதிருப்தியும், கொந்தளிப்பும் உருவாகியுள்ளது.
இதற்கிடையில், உத்தம வில்லன் உலகம் எங்கும் மற்ற நாடுகளில் வெளியாகியுள்ளது. மலேசியாவிலும் இந்தப் படம் நேற்று முதல் திரையீடு கண்டது.
உத்தம வில்லன் படத்தின் செல்லியல் திரைவிமர்சனத்தை கீழ்க்காணும் இணையத் தொடர்பில் காணலாம்.