கோலாலம்பூர், மே 1 – பயங்கர பூகம்பம் நேப்பாள தேசத்தை சின்னாபின்னம் ஆக்கிய நிலையில் அங்கிருந்து மயிரிழையில் உயிர் தப்பி வந்துள்ள மலேசியர்கள் அந்த பயங்கர தருணங்களை இன்னமும் கூட பீதியுடன் அசை போடுகின்றனர்.
தற்காலிக குடில்களில் தஞ்சமடைந்துள்ள நேபாள மக்கள்….
காத்மாண்டுவின் மையப் பகுதியில் தனது நண்பருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார் ரஷிட் ரம்லி (33 வயது). அப்போது தான் பெரும் பூகம்பத்திற்கு முன்னே சிறு அதிர்வுகள் தோன்றியுள்ளன.
“என்ன நடந்தது என்பது முதலில் எங்களுக்குப் புரியவில்லை. பிறகு மக்கள் அங்குமிங்குமாக அலறியடித்தபடி ஓடுவதைக் கண்டோம். மேலும் பல கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்தன. ஒரு குறுகலான தெருவின் வழியே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, சிதறிக்கிடந்த இடிபாடுகளைக் கடந்து ஓடினோம்,” என்கிறார் ரஷிட்.
எப்படியோ த்ரிபுவன் அனைத்துலக விமான நிலையத்தை தனது நண்பருடன் சென்றடைந்த அவர், பின்னர் 3 நாட்கள் காத்திருந்து நேப்பாளத்திலிருந்து மீட்கப்பட்ட 102 மலேசியர்களுடன் நாடு திரும்பியுள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்களில், 8 மாத கர்ப்பிணியான ஷீலாவும் (30 வயது) அவரது கணவரும் கூட அடங்குவர்.
சாலையோரங்களில் படுத்துறங்கிய மக்கள்
“நிலநடுக்கத்திற்குப் பின்னர் காட்மாண்டுவில் ஒவ்வொரு கணத்தையும் பீதியுடன் கழித்தோம். ஒவ்வொரு மணி நேரமும் அங்கு நில அதிர்வுகளை உணர முடிந்தது. அங்கிருந்து கிளம்பும் முன்னர் கூட அதிர்வுகளை உணர்ந்தோம்,” என்று அச்சத்துடன் நடந்ததை விவரிக்கிறார் ஷீலா.
நிலநடுக்கத்திற்குப் பின்னர் காட்மாண்டு சாலைகள் முழுக்க உயிருக்குப் போராடுபவர்களையும், மனித சடலங்களையும் காண முடிந்ததாக அங்குள்ள மலேசியத் தூதரக ஊழியர் ஒருவர் தெரிவிக்கிறார்.
“வீடுகளை இழந்த மக்கள் சாலையோரங்களில் படுத்து உறங்கினர். அதே சமயம் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு தங்கள் வீடுகள் இடிந்து தங்கள் மேலேயே விழுந்துவிடுமோ என்றும் பலர் அஞ்சினர்” என்கிறார் அந்தத் தூதரக ஊழியர்.
இந்நிலையில் 27 வயதான சியாசுயானி சுயப்பின் நினைவுகள் முழுவதும் காட்மாண்டுவை மையப்படுத்தியே உள்ளது. தனது 8 மாத மகனுடன் பத்திரமாக மலேசியா திரும்பியுள்ளார் அவர். எனினும் நேப்பாளத்தில் உள்ள மலேசியத் தூதரகத்தில் பணியாற்றும் அவரது கணவர் அங்கு மீதமுள்ள மலேசியர்களை பத்திரமாக மீட்கும் பணிக்காக அங்கேயே தங்கியுள்ளார்.
“நானும் எனது மகனும் நாடு திரும்பியதில் மகிழ்ச்சி. எனினும் எனது கணவரை நினைத்து கவலையாக உள்ளது. அவர் நலமாக இருப்பார் என நம்புகிறேன். நில நடுக்கம் ஏற்பட்டபோது எனது வீட்டில் இருந்தேன். அனைத்துப் பொருட்களும் மிக வேகமாக குலுங்கின. நேராக நிற்பதற்கும் கூட என்னால் முடியவில்லை,” என்கிறார் சியாசுயானி.
இந்த கோரமான நிலநடுக்கம் ஏற்படுத்தியுள்ள பாதிப்பிலிருந்து நேப்பாளம் மீண்டு வர பல்லாண்டுகள் ஆகும் என்கிறார்கள் நிபுணர்கள். அதற்குள் மீண்டும் ஒருமுறை பூமித்தாய் கோபப்பட்டுவிடக் கூடாது என்பதே உலக மக்களின் பிரார்த்தனையாக உள்ளது.