கோலாலம்பூர், மே 2 – மாஸ் நிறுவனம், மறு சீரமைப்பு நடவடிக்கையாக தனது ஆறு ஏர்பஸ் விமானங்களை விற்பனை செய்யவோ அல்லது குத்தகைக்கு விடவோ முடிவு செய்துள்ளது.
மாஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக கிறிஸ்டோபர் முல்லர் நேற்று முன்தினம் முதல் பதவி ஏற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஆறு ஏர்பஸ் A380 விமானங்கள், இரண்டு போயிங் விமானங்கள் மற்றும் நான்கு A330-200F விமானங்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கணிசமான அளவு தொகையை சேகரிக்க முடியும் என்பது மாஸ் நிறுவனத்தின் முக்கியத் திட்டமாகும்.
மூன்று வருட பொருளாதார சரிவு, இரு பெரும் பேரிடர்கள் கராணமாக, கடுமையான வீழ்ச்சியை சந்தித்த மாஸ் நிறுவனத்தை, கஸானா நேசனல் நிறுவனம் கைப்பற்றி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, வருவாய் குறைந்த நகரங்களுக்கு விமானப் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொண்ட கஸானா, அடுத்த கட்ட நடவடிக்கையாக விமானங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. குத்தகைதாரர்கள் குத்தகைக் எடுக்க விரும்பினாலும், கஸானா அதற்கும் தயாராக உள்ளது.
விமானங்களை விற்பனை செய்வது முல்லரின் அதிரடி முடிவு என்று கூறப்பட்டாலும், கஸானா, முல்லர் பதவி ஏற்பதற்கு முன்பே இதே முடிவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மறுசீரமைப்பின் மற்றொரு பகுதியாக, 6000 மாஸ் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதும் உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.