காட்மாண்டு, மே 2 – நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி, 12 ஐரோப்பியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 1000 பேர் மாயமாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி உள்ளது. இன்னும் இடிபாடுகளில் ஆயிரக்கணக்கானோர் சிக்கி உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இந்நிலையில், ஐரோப்பாவைச் சேர்ந்த 1000 பேர் நேபாளில் மாயமாகி உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் நிலநடுக்கம் ஏற்படுவதற்கும் முன், இங்குள்ள மலைகளில் ஏறுவதற்காகவும், சுற்றுலாப் பயணத்திற்கும் ஐரோப்பாவைச் சேர்ந்த பலர் நூற்றுக்கணக்கில் நேபாள் வந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டதில் அவர்களின் கதி என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை.
இது குறித்து ஐரோப்பாவின் தூதர் ரேன்ஸ்ஜி டேரின்க் கூறுகையில், “நேபாள நிலநடுக்கத்தில் 12 ஐரோப்பியர்கள் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. எனினும், அங்கு சுற்றுலா சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐரோப்பியர்களின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஐரோப்பியர்கள் 1000 பேர் மாயமானது பற்றி எங்களிடம் ஏன் தெரிவிக்கவில்லை என நேபாள அரசு கேள்வி எழுப்பி உள்ளது.