சென்னை, மே 2 – ‘உத்தம வில்லன்’ படத்தின் தயாரிப்பாளர்கள் தரப்பில் பிரச்சனை நீடிப்பதால், தமிழகத்தில் இன்றும் படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.
கமல்ஹாசன் நடிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் இயக்குனரும், தயாரிப்பாளருமான லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் உத்தம வில்லன்.
மே 1-ம் தேதியான நேற்று, உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. எனினும், தமிழகத்தில் படம் வெளியாக வில்லை. அதற்கு காரணமாகக் கூறப்படுவது, கமலின் விஸ்வரூபம் திரைப்படத்தை, டி.டி.எச் வசதியில் வெளியிட முயன்றபோது, திரை அரங்கு உரிமையாளர்கள் பிரச்னை செய்ததால், சந்தை போட்டி அமைப்பில், கமல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், திரை அரங்க உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை கமல் தான் செலுத்த வேண்டும் என, திரை அரங்கு உரிமையாளர்கள் வலியுறுத்தினர். மேலும், இந்தப் பிரச்னைக்கு முடிவு காணப்படாத வரை, உத்தம வில்லன் படத்தை வெளியிட மாட்டோம் என்றும் கூறினர்.
மேலும், இந்தப் பிரச்னையை சுமுகமாக தீர்க்க திரை அரங்க உரிமையாளர் ஒருவர், ஒரு கோடி ரூபாய் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த லிங்குசாமி தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் அளித்தார். தயாரிப்பாளர் சங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு சுமூகத் தீர்வை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, படத்தின் தயாரிப்பாளருக்கும், படத்திற்கு நிதி உதவி வழங்கிய நிறுவனத்திற்கும் இடையே திடீர் பிரச்னை ஏற்பட்டதால் படம் திரையிட முடியாத சூழல் உருவாகியது. அவை அனைத்தும் தீர்க்கப்பட்டதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு அறிவித்த போதும், நேற்று மாலைக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
நேற்று இரவு 9 மணி வரை, இந்த பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண முடியாததால், படம் இன்று வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.