டொரன்டோ, மே 2 – மனிதர்களுக்கான நான்கு முக்கிய பிரிவுகளில் ‘ஓ’ பிரிவு ரத்தமே பொதுவானது. அதனை யாருக்கு வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆனால் மற்ற பிரிவுகளை அப்படி செய்ய முடியாது. எனினும், அதனை பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திக் காட்டி உள்ளனர்.
மனிதர்களின் ரத்தம் பற்றிய ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்கு உலக நாடுகள் பலவும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. காரணம், அவசர காலத்தில், நோயாளிக்கு தேவைப்படும் அவரது சொந்த பிரிவு ரத்தமோ அல்லது ‘ஓ’ பிரிவு ரத்தமோ கிடைக்காத நிலையில் உயிர் போராட்டம் நடைபெற வேண்டிய சூழல் இன்றும் உள்ளது.
அவசர காலத்தில் மேற்கூறிய சிரமங்களைத் தடுக்க ரத்த வங்கிகள் செயல்பட்டாலும், கடும் அவதி ஏற்படுவது வாடிக்கையாகி உள்ளது. அதனைத் தவிர்க்க, விஞ்ஞானிகள் மனித ரத்தப் பிரிவுகள் பற்றிய ஆராய்ச்சியை நடத்தி வந்தனர். இந்நிலையில், தொடர் ஆராய்ச்சிக்கு உரிய பலன் கிடைத்துள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த ஆய்வு குழுவின் தலைவர் விஞ்ஞானி டேவிட் கவான் கூறியதாவது:-
“ஒவ்வொரு ரத்தப் பிரிவுகளும், வெவ்வேறான சர்க்கரை மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு ரத்தத்தில் சர்க்கரை மூலக்கூறுகள் அதிகம். ‘ஓ‘ பிரிவு அல்லாது வேறு பிரிவு ரத்தம் மாற்றி செலுத்தப்பட்டால், பெரும் அபாயம் ஏற்படும். இந்நிலையில், எங்களது ஆய்வின் மூலம், நாங்கள் கண்டறிந்துள்ள ‘என்சைம்’ (enzyme), மற்ற பிரிவு ரத்தில் கலந்துவிட்டால், சர்க்கரை அளவை குறைத்து ‘ஓ’ பிரிவு ரத்தம் போன்று மாற்றிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற ஆய்வுகள் பல நடைபெற்று இருந்தாலும், இந்த ஆய்வு வெற்றி பெற்றுள்ளதாகவே கூறப்படுகிறது. எனினும், இதனை உடனடியாக மருத்துவத் துறையில் நடைமுறைப்படுத்தும் அளவிற்கு நம்பகத்தன்மையை ஏற்படவில்லை. அதனால், இது தொடர்பான ஆராய்ச்சிகள் இன்னும் சிறிது காலத்திற்கு நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.