புது டெல்லி, மே 5 – குண்டூசி முதல் திறன்பேசி வரை, இந்தியாவில் சீனப் பொருட்களின் ஆதிக்கம் மிக அதிகம். மலிவான விலையாக இருந்தாலும், அவற்றில் பெரும்பான்மையான பொருட்கள் தரமற்றவையாகவே இருக்கும். இவற்றுக்கெல்லாம், இந்தியாவில் தரமதிப்பீடு உள்ளனவா, பல பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய போதும், இந்திய அரசு அதனை கவனத்தில் கொள்கிறதா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழாமல் இல்லை.
தற்போது தான், இந்திய அரசின் கவனம் சீனப் பொருட்களின் பக்கம் திரும்பி உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தயாரிப்புகளுக்கு ‘இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பு’ (Bureau of Indian Standards) பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் படி, பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள், இந்தியாவில் விற்பனையாகும் தங்கள் பொருட்களுக்கு இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் அங்கீகாரத்தைப் பெற விண்ணப்பித்துள்ளன.
இதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, இந்திய தர மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்துள்ள நிறுவனங்களில் 60 சதவீத நிறுவனங்கள், சீனாவைச் சேர்ந்தவை என்று கூறப்படுகிறது. அவற்றில் சியாவுமி மற்றும் ஹவாய் போன்ற பெரு நிறுவனங்களும் அடங்கும். அதேபோல் உள்ளூர் நிறுவனங்களும், தர மதிப்பீட்டிற்கு உட்பட வேண்டும் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இது பற்றி இந்திய அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்திய அரசின் தர மதிப்பீட்டுச் சான்றிதழ் பெற்றால் தான், இந்தியாவில் பொருட்களை விற்பனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை விதித்தவுடன் பெரும்பான்மையான நிறுவனங்கள் தங்களின் பொருட்களை இந்திய தர மதிப்பீட்டு ஆணையத்திடம் பதிவு செய்துள்ளன. அவற்றில் சீன நிறுவனங்களே அதிகம்” என்று தெரிவித்துள்ளார்.
சீன நிறுவனங்கள் மட்டுமல்லாமல், மலேசியா, அமெரிக்கா, கொரிய நிறுவனங்களும் தர மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.