Home இந்தியா இந்தியா – வங்கதேச எல்லை ஒப்பந்த மசோதா நிறைவேற்றம் – சோனியாவுக்கு மோடி நன்றி!

இந்தியா – வங்கதேச எல்லை ஒப்பந்த மசோதா நிறைவேற்றம் – சோனியாவுக்கு மோடி நன்றி!

530
0
SHARE
Ad

Modiபுதுடெல்லி, மே 8 – பக்கத்து நாடான வங்கதேசத்துடன் 41 ஆண்டு காலமாக நீடித்து வந்த எல்லைப் பிரச்சனை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்தியா – வங்கதேச எல்லை ஒப்பந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் நிறைவேறியது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த மசோதாவின் மூலம், இரு நாடுகளும் தங்கள் எல்லைப்பகுதியில் உள்ள நிலப்பரப்புகளை பரிமாறிக்கொள்ள இது வகை செய்கிறது.

1974-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் வங்கதேச பிரதமர் முஜீபூர் ரகுமானுக்கும் இடையே ஏற்பட்ட நில எல்லை ஒப்பந்தத்தை செயல்படுத்த நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.

#TamilSchoolmychoice

நாடாளுமன்றத்தில் 331 உறுப்பினர்களும் அவையில் அமர்ந்திருந்து, 100-வது சட்டதிருத்தத்தை நிறைவேற்றினர். இந்த மசோதா நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியவுடன், இருக்கையில் அமர்ந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி வரிசைக்கு நடந்து சென்றார்.

அங்கு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, அ.இ.அ.தி.மு.க. தலைவர் பி.வேணுகோபால் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

நில எல்லை ஒப்பந்த மசோதா நிறைவேற்றியதற்கு வங்கதேசம் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து வங்கதேச தூதர் சயீத் முவாசீம் அலி கூறுகையில், “இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள். 41 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்பட்டுள்ளது”.

“பிரதமர் மோடிக்கும், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாவுக்கும் நன்றி.  வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பிரதமர் மோடி, வங்கதேசம் வருகிறார். மோடி வரும் தேதிகள் விரைவில் முடிவு செய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

நில எல்லை மசோதா நிறைவேற உதவியதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி  நன்றி தெரிவித்தார். மேலும், அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ்,

மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோருக்கும் மோடி தொலைபேசி வாயிலாக நன்றி தெரிவித்தார். இது குறித்து டுவிட்டரில் பிரதமர் மோடி  பதிவு செய்த கருத்தில், இந்திய – வங்கதேச எல்லை வரையறை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையேயான உறவில் வரலாற்று சிறப்பு மிக்க மைல் கல். இதன்மூலம், இரு நாடுகளிடையே அமைதியான மற்றும் நிலையான எல்லை வரையறுக்கப்படும். இதனால் சிறப்பான ஒருங்கணைப்பும், நிர்வாகமும் செய்ய முடிவதால், எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

இம்மசோதா நிறைவேற்ற காரணமாக இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா மற்றும் மேற்குவங்க மாநில அரசுகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டார் மோடி.