மார்ச் 8 – ‘இந்தியா பாகிஸ்தான்’ ஒரு காமெடி படம் என்று கூறப்பட்டதால், விஜய் ஆண்டனியின் முந்தைய வெற்றிப் படங்களான நான், சலீம் ஆகியவற்றின் சீரியஸ் ஆன கதைக் களத்தை மறந்துவிட்டு, ஒரு புதிய அனுபவத்தை பெறும் மனநிலையோடு போய் படம் பார்த்தால், “அட .. ஆமா உண்மையில் காமெடி படம் தான்” என்று தோன்றியது. அவ்வப்போது.. வெளியே போய் அடக்க முடியாம சிரிச்சுட்டு வந்தோம்னா பாத்துக்கங்க..
ஜெகன், எம்எஸ் பாஸ்கர், மனோபாலா, காளி வெங்கட், பசுபதி என அவ்வளவு காமெடி பட்டாளம் இருந்தும் இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் படி காமெடி பண்ணியிருப்பது படத்தின் கதை தான்.
பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம்னு இத்தனை நவீன வசதிகள் கையில் இருந்தும் கூட, அதையெல்லாம் ஒரு பெரிய விசயமாக கருதாத இயக்குநர் என்.ஆனந் ஒட்டுமொத்த கதை திருப்பத்தையும் ஒரு டிவிடி-ல் வைத்திருக்கிறார் பாருங்க.. அடடா..
படத்திற்கு என்.ஓம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தீனா தேவராஜன் இசையமைத்திருக்கிறார். விஜய் ஆண்டனி கார்பரேசன் படத்தை தயாரித்திருக்கின்றது.
கதைச் சுருக்கம்
கார்த்திக்கும் (விஜய் ஆண்டனி), மெலினா (சுஷ்மா ராஜ்) இருவரும் வக்கீல்கள். ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தனித்தனியாக வக்கீல் அலுவலகத்தை நடத்தி வருகின்றனர். இருவருக்கும் இடையே எப்போதும் இந்தியா பாகிஸ்தான் போல மோதல். ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது.
இந்நிலையில் மெலினா அலுவலகத்தில் ஒரு கொலை சம்பந்தமான ஆதாரம் அவருக்கே தெரியாமல் இருக்கிறது. அது ஒரு டிவிடி. அதை தேடி அலையும் கொலைவெறி பிடித்த கும்பல் ஒன்று கடைசியில் அவளையும், அவளுக்கு வேண்டியவர்களையும் கடத்துகிறது.
கிளைமாக்ஸ்-ல் விஜய் ஆண்டனி அந்த டிவிடி-ஐயும், தனது காதலியையும் எப்படி மீட்கிறார் என்பதோடு சுபம் போடப்படுகின்றது.
நடிப்பு
இரண்டு படங்களாக ரொம்ப சீரியஸ் ஆக முகத்தை வைத்துக் கொண்டு ஹீரோயினுடன் டூயட் பாடிகிட்டு இருக்கோமேன்னு நெனச்ச விஜய் ஆண்டனி. இந்த படத்தில் ஒரு மாறுதலுக்காக ஆட்டம், பாட்டம்னு என்னென்னவோ முயற்சிகள் செய்திருக்கிறார்.
பாடல் ஒன்றில் தண்ணியடித்துவிட்டு குத்தாட்டம் போடுகிறார். அவ்வப்போது சில காட்சிகளில் வாயை ஓரமாக இழுத்து ரஜினி மாதிரி பஞ்ச் வசனங்கள் பேசுகிறார்.
ஹீரோயின் சினிமாவுக்கு புதுசு.. நடிப்பு கொஞ்சம் பரவாயில்லை.. விஜய் ஆண்டனியுடன் சண்டையிடும் காட்சிகளில் எரிச்சல் தான் வருகின்றது.
எதற்கெடுத்தாலும் சகுனம் பார்க்கும் எம்எஸ் பாஸ்கர், அரிவாளை காட்டி சிரிப்பு மூட்டும் பசுபதி, ஜெகன், மனோபாலா ஆகியோர் நடிப்பு ஓரளவு ஆறுதல்.
படத்தின் பலவீனம்
ஆனந்த் ராஜ், கபாலி எல்லாம் மெயின் வில்லனாக இருந்த காலகட்டத்தில், படத்தின் ஓப்பனிங் சீனில் அடைமழையில் ஒரு ரிப்போர்ட்டர் வயிற்றில் கத்திக் குத்தோடு, ரத்தம் வழிய மூச்சிரைக்க ஓடி வருவார். அவரை ஒரு கும்பல் துரத்திக் கொண்டு வரும்.
ஒரு வீட்டிற்குள் பதுங்கி கொள்ளும் அந்த ரிப்போர்ட்டர், அங்கிருக்கும் விசிடி-இல் ஒரு கொலை சம்பந்தமான தனது வாக்குமூலத்தை பதிவு செய்து விட்டு அந்த விசிடி-ஐ எங்காவது ஒரு குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு இறந்துவிடுவார்.
அப்படி தான், இந்த படத்திலும் ஒரு ஓப்பனிங். என்ன விசிடி-க்கு பதிலாக டிவிடி. என்ன கொஞ்சம் வித்தியாசமாக, அவர் அதை ஒரு டிவிடி விற்கும் கடையில் மற்ற டிவிடி-களோடு கலந்து விடுகிறார்.
ஐயா.. நாலு வருஷத்துக்கு முன்னால வந்த கோ படத்துலையே.. கேமராவுல இருந்து மெமரிகார்டு மூலமா படங்களை இமெயில் பண்ணிட்டாங்க.. இப்பலெல்லாம் இமெயில் கூட இல்லை..
பேஸ்புக், வாட்ஸ்அப்-ன்னு வீடியோஸ் சும்மா காட்டுத் தீ மாதிரி பரவிக் கிட்டு இருக்குற காலத்துல போய் படத்தின் முக்கிய திருப்பமா ஒரு டிவிடி ஆதாரம்.. அதுவும் 2015-ல் நடக்கும் கதை என்று டைட்டில் வேறு..
வில்லன்கள் துரத்திகிட்டு இருக்கும் போது, கையில் ஸ்மார்ட் போன் வச்சுகிட்டே, ஹீரோ விஜய் ஆண்டனி,ஒரு கம்ப்யூட்டர்ல உட்கார்ந்து பொறுமையா டூப்ளிக்கட் டிவிடி போட்டுகிட்டு இருக்காரு..
இப்படியாக படத்தில் அவ்வளவு பழமை..
முதல் பாதியில் கேஸ் புடிக்கிறேன்னு, கேஸ் புடிக்கிறேன்னு ஜவ்வாக இழுக்கும் திரைகதை, பிற்பாதியில் தான் எம்எஸ் பாஸ்கர், பசுபதி வரவிற்குப் பிறகு ஓரளவு ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது..
படத்தில் ரசித்தவை
படத்தில் ரசிப்பதற்கான காட்சிகள் என்றால் அது பசுபதி, எம்எஸ் பாஸ்கர் குழு வந்த பிறகு தான்.. ஷாப்பிங் மாலில் அந்த காதல் ஜோடியை மறைக்க விஜய் ஆண்டனியும், ஜெகனும் போராடும் காட்சி கொஞ்சம் சிரிப்பை வரவழைத்து ஆசுவாசப்படுத்தியது.
பாடல்களில் இந்தியா நான், பாகிஸ்தான் நான் பாடலின் கிராபிக்ஸ் மற்றும் வாடி குட்டி லேடி பாடலும், காட்சிகளும் ரசிக்க வைத்தது..
மற்றபடி, விஜய் ஆண்டனியின் முந்தைய படங்களான நான், சலீமை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியா, பாகிஸ்தான் மிகவும் ஏமாற்றமே!
– செல்லியல் விமர்சனக் குழு