கோலாலம்பூர், மே 9 – 1 எம்டிபி தொடர்பில் நஜிப் மீதான எதிர்ப்பு தொடர்ந்து வலுத்து வருகின்றது. அண்மையில் 1எம்டிபி திட்டமான துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் எனப்படும் மேம்பாட்டுத் திட்டத்தில் உள்ள ஒரு நிலத்தை தாபோங் ஹாஜி (Lembaga Tabung Haji) எனப்படும் அரசாங்க நிறுவனம் வாங்கியிருப்பது குறித்து முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
தலைநகர் துன் ரசாக் சாலையில் உள்ள தாபோங் ஹாஜி தலைமையகம்
மற்ற பல தரப்புகளில் இருந்தும் இந்த ஒப்பந்தம் குறித்து கடுமையான எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.
மெக்காவுக்கு புனிதப் பயணம் செல்வதற்காக சிறுக, சிறுக இலட்சக்கணக்கான முஸ்லீம் அன்பர்கள் வாழ்நாளில் சேமித்து வைக்கும் பணத்திற்கான சேமிப்பு மையமாக ‘தாபோங் ஹாஜி’ என்ற அமைப்பு அரசாங்கத்தின் துணை நிறுவனமாக செயல்படுகின்றது.
இந்த நிறுவனம் 1எம்டிபியின் நிலத்தை வாங்குவதற்கு செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என மகாதீர் அறைகூவல் விடுத்துள்ளார்.
கடன் சிக்கலில் மூழ்கியுள்ள 1எம்டிபி நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்காக மெக்கா புனிதப் பயணம் மேற்கொள்பவர்களின் சேமிப்பை – பொதுமக்கள் பணத்தை – பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மகாதீர் கருத்து தெரிவித்துள்ளார்.
1 எம்டிபி திட்டமான துன் ரசாக் எக்ஸ்சேஞ்சிலுள்ள ஒரு நிலத்தை கழிவு விலையில் 188.5 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கியுள்ளதாக தாபோங் ஹாஜி அறிவித்திருந்தது.
துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் திட்டத்துக்கான 70 ஏக்கர் நிலத்துக்கும் மொத்தமாக 194.1 மில்லியன் ரிங்கிட்டை மட்டுமே 1எம்டிபி அரசாங்கத்திற்கு செலுத்தியதாகக் குறிப்பிட்ட மகாதீர் –
தற்போது அதில் ஒரு துண்டு நிலத்திற்காக மட்டும் அதற்கு இணையான ஒரு தொகையைச் செலுத்துகின்றது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இது தாபோங் ஹாஜி பணமல்ல – மாறாக மக்களின் பணம் – இதனைக் கொண்டு 1எம்டிபியைக் காப்பாற்றும் முயற்சில் தாபோங் ஹாஜி ஈடுபடக் கூடாது என்றும் மகாதீர் வலியுறுத்தியுள்ளார்.