Home நாடு அமைதி காத்த நஸ்ரி மகாதீருக்கு எதிராக சவால்!

அமைதி காத்த நஸ்ரி மகாதீருக்கு எதிராக சவால்!

552
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 14 – மகாதீருக்கும், நஜிப்புக்கும் இடையிலான சர்ச்சையில் இதுவரை வாய்திறக்காமல் மௌனம் காத்து வந்தவர் அமைச்சர் நஸ்ரி. இதன் காரணமாக இவர், எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றத்தில் நஜிப்பால் கழட்டி விடப்படுவார் என்ற ஆரூடங்களும் நிலவி வந்தன.

nazriazizஇந்நிலையில் நேற்று மகாதீருக்கு எதிராக நஸ்ரி குரல் கொடுத்துள்ளார். “பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் தலைமைத்துவம் மீது அதிருப்தி கொண்டுள்ள அம்னோவின் முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்கள், அடுத்த பொதுத் தேர்தலில் அவரை எதிர்த்துப் பார்க்கட்டும்” என சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சரும் முகமட் நஸ்ரி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நஜிப்பை ராஜினாமா செய்ய வலியுறுத்தும் துன் மகாதீர், தமக்கு இன்னமும் ஆதரவு இருப்பதாகக் கருதினால், அடுத்த பொதுத் தேர்தலில் அவர் நஜிப்புக்கு சவால் விடுக்க வேண்டும் என்றும் நஸ்ரி கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனும் மகாதீரின் நிர்பந்தத்திற்கு நஜிப் அடிபணியக் கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், மகாதீர் தனது ஒரேயொரு வாக்கை (vote) மட்டுமே பிரதிநிதிக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.

“பிரதமர் நஜிப் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது எனில் அடுத்த பொதுத் தேர்தலில் தங்களின் வாக்குகள் மூலம் அதை வெளிப்படுத்துவர். பிரதமரை மாற்றுவது என்பது ஜனநாயக முறைப்படியே நடைபெற வேண்டும். கட்சித் தேர்தலில் நஜிப்பை கட்சியினர் எதிர்க்க முடியும். அதேபோல் பொதுத் தேர்தலில் நஜிப்பிற்கு வாக்களிப்பதா வேண்டாமா என்பதை வாக்காளர்கள் முடிவு செய்வர்” என்றும் நஸ்ரி ஜனநாயக நடைமுறைக்கு தனக்கே உரித்தான பாணியில் விளக்கம் தந்துள்ளார்.

“அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கட்சித் தேர்தல் மற்றும் 2018 பொதுத் தேர்தல் வரை நாம் காத்திருப்போம். நஜிப்பை எதிர்க்க வேண்டும் என நினைப்பார்களேயானால் அதை ஜனநாயக முறைப்படி செய்யட்டும்,” என்று நஸ்ரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.