பெய்ஜிங், மே 14 – ஆப்பிள் நிறுவனத்தின் திறன்பேசி வழிக் கட்டணம் செலுத்தும் முறையான ‘ஆப்பிள் பே’ (Apple Pay) சேவையை சீனாவில் மேம்படுத்த அலிபாபா நிறுவனத்துடன் கைகோர்க்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது. இதற்காக இரு நிறுவனங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை உறுதி செய்யும் விதமாக ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி டிம்குக், சீனாவின் பிரபல பத்திரிக்கையான சின்ஹுவாவிற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், “சீனாவில் ஆப்பிள் பே திட்டத்தை மேம்படுத்த காத்திருக்கின்றோம். இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “அமெரிக்காவில் வெற்றி பெற்றுள்ள இந்த திட்டம் சீனாவிலும், பெரும் வெற்றி பெறும்” என்று கூறியுள்ளார்.
அலிபாபா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் ஜாக் மா, இது குறித்த தகவல்களை கடந்த சில மாதங்களுக்கு முன்னரே வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.