Home இந்தியா ஈராக்கில் ஐஎஸ் இயக்கத்தால் 39 இந்தியர்கள் படுகொலை – தப்பி வந்தவர் பகீர் தகவல்!

ஈராக்கில் ஐஎஸ் இயக்கத்தால் 39 இந்தியர்கள் படுகொலை – தப்பி வந்தவர் பகீர் தகவல்!

579
0
SHARE
Ad

sushmaசண்டிகர், மே 15 – ஈராக்கில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 40 இந்தியர்களில் 39 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அங்கிருந்து தப்பி வந்த ஒருவர் அளித்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈராக்கின் மொசூல் நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 11-ம் தேதி, கட்டிட வேலையில்  ஈடுபட்டு இருந்த 40 இந்தியர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டனர். தற்போது வரை அவர்கள் என்னவானார்கள் என்று ஒரு தகவலும் இல்லை. அவர்களை தேடும் பணியை இந்திய அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதனிடையே, கடத்திச் செல்லப்பட்டவர்களில் ஹர்ஜித் மசி (25) என்பவர் ஈராக்கிலிருந்து தப்பி இந்தியா வந்து சேர்ந்தார். அவரிடம் இந்திய உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் ஹர்ஜித் மசி பத்திரிக்கையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “கடந்தாண்டு ஜூன் மாதம் 11-ம் தேதி மொசூல் நகரில் பணியில் இருந்த 40 இந்தியர்களை ஐஎஸ் இயக்கத்தினர் கடத்திச் சென்று பிணைக்கைதிகளாக்கினர். எங்களுடன் அந்த அறையில் 50 வங்கதேசத்தவர்களும் இருந்தனர். சில நாட்கள் கழித்து நாங்கள் அனைவரும் வேறொரு அடியாளம் தெரியாத பகுதிக்கு மாற்றப்பட்டோம்.”

“அதன் பின்னர் இந்தியர்களை மட்டும் கடினமான நிலப்பகுதி அழைத்துச் சென்ற தீவிரவாதிகள், அங்கு ஒரு திறந்தவெளியில் எங்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் எனக்கு காலில் அடிபட்டது. என்னைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் இறந்தனர். நான் இறந்தது போல் நடித்து அங்கிருந்து தப்பி வந்துவிட்டேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இறந்ததாகக் கூறப்படும் இந்தியர்களின் உறவினர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு பதில் அளித்துள்ள சுஷ்மா, விரைவில் இது தொடர்பாக துரித விசாரணை மேற்கொள்ளப்படும். இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.