Home கலை உலகம் பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனா மரணம்- இன்று உடல் தகனம்

பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனா மரணம்- இன்று உடல் தகனம்

906
0
SHARE
Ad

raja-sulochanaசென்னை, மார்ச்.6- பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனா நேற்று காலை மரணம் அடைந்தார். அவரின் உடல் தகனம் இன்று நடக்கிறது. ‘சத்திய சோதனை’, ‘அரசிளங்குமரி’, ‘குலேபகாவலி’, ‘பெண்ணரசி’, ‘ரங்கூன் ராதா’, ‘அம்பிகாபதி’ உட்பட ஏராளமான படங்களில் கதாநாயகி, குணச்சித்திரம், வில்லி வேடங்களில் நடித்தவர் ராஜசுலோச்சனா (78). இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 275க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ராஜசுலோசனா கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். சில நாட்களுக்கு முன் உடல்நிலை பெரிதும் மோசமடைந்ததை தொடர்ந்து, மடிப்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை 2.45 மணியளவில் மரணம் அடைந்தார்.

ராஜசுலோச்சனாவின் உடல், மடிப்பாக்கம் சதாசிவம் நகரிலுள்ள வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. அவரது மகன் ஷியாம் சுந்தர், மகள் ஸ்ரீ இருவரும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். தகவலறிந்த அவர்கள் உடனே சென்னை வந்தனர். மற்றொரு மகள் தேவி, கணவருடன் சென்னையில் வசிக்கிறார்.  மரணம் அடைந்த ராஜசுலோச்சனாவின் உடல் தகனம், சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று மதியம் 1 மணியளவில் நடக்கிறது. முன்னதாக அவரது உடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. திரையுலகைச் சேர்ந்த பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

#TamilSchoolmychoice

எம்ஜிஆர், சிவாஜி, என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார் போன்ற சூப்பர் ஸ்டார்களின் படங்களில் நடித்த ராஜசுலோச்சனா, 1935ம் ஆண்டு சித்தூரில் பிறந்தார். நடிகர் மற்றும் இயக்குனர் ராவ் என்பவரை மணந்தார். 7 ஆண்டுகளுக்கு முன், ராவ் இறந்து விட்டார். தனது 17வது வயதில் நடிக்க வந்த ராஜசுலோச்சனா, 1953ல் ‘குணசாகரி’ என்ற கன்னடப் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

இவர் நடித்த கடைசி படம், ‘எங்க வீட்டு வேலன்’. அப்போது மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். 25 ஆண்டுக்கு முன் அமெரிக்காவில் குடியேறிய அவர், ‘புஷ்பாஞ்சலி நிருத்ய கலாகேந்திரம்’ என்ற பெயரில் நாட்டியப் பள்ளி நடத்தினார்.

ஜெயலலிதா இரங்கல்:-

ராஜசுலோச்சனாவின் மறைவுக்கு  முதல்வர் ஜெயலலிதா இரங்கல் செய்தியில், ‘திரைப்படத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்த ராஜசுலோச்சனா, தனது அபார நடிப்பின் மூலம் புகழின் உச்சியை எட்டியவர். பழகுவதற்கு இனிமையானவர். அவரது மறைவு, எனக்கு தனிப்பட்ட முறையில் மட்டுமின்றி, திரைப்படத் துறைக்கும் மிகப் பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைதெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதி இரங்கல்:-

பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனா, சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைந்த செய்தி அறிந்து வருந்துகிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடத் திரைப்படங்கள் பலவற்றில் திறம்பட நடித்து புகழ் பெற்றவர். சிறந்த நாட்டிய நடிகை. அவரை இழந்து வருந்தும் திரைப்படத் துறையினருக்கும், அவருடைய குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.