டெல்லி,மே 20- இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்துத் தனது அரசின் ஓராண்டு செயல்பாடுகள் குறித்தும்,தொடர்ந்து இந்தியாவின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் முக்கிய அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
ரேஸ் கோர்ஸ் சாலையில் இருக்கும் அவரது இல்லத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர்அருண் ஜெட்லி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் கலந்து கொண்டு விவாதித்து வருகின்றனர்.
நாட்டுப் பணிகளில் கவனம் செலுத்தாமல் நாடு நாடாய்ச் சுற்றி வருகிறார் என்றும், மோடி அரசு ஒரு கார்பரேட் அரசு என்றும், ஏழைகளுக்கு எதிரான அரசு என்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், நடைபெறும் இந்தக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.