Home கலை உலகம் திரைவிமர்சனம்: டிமான்ட்டி காலனி – ஒருமுறை உள்ளே சென்று பார்க்கலாம்!

திரைவிமர்சனம்: டிமான்ட்டி காலனி – ஒருமுறை உள்ளே சென்று பார்க்கலாம்!

749
0
SHARE
Ad

deman-600x300மே 23 – ‘காஞ்சனா’ ஏற்படுத்திய தாக்கத்திற்குப் பின்னர், பேய் படம் என்றாலே முற்றிலும் காமெடி என்றாகிவிட்ட நிலையில், மீண்டும் ஒரு பயமுறுத்தும் பேய் கதையுடன் பழைய டிரெண்டை பிடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள் ‘டிமான்டி காலனி’ படக்குழுவினர்.

ஏ.ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கியுள்ளார்.

அருள்நிதி, `சூது கவ்வும்’ ரமேஷ் திலக், சனத், அபிஷேக், சிங்கம்புலி, எம்எஸ் பாஸ்கர், மதுமிதா உள்ளிட்ட நடிகர்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

கதை என்ன?

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள டிமான்ட்டி காலனி பேய்கள் நடமாடும் ஒரு இடமாகக் கூறப்படுகின்றது. அதற்குப் பின்னால் 19 நூற்றாண்டில் நடந்த ஒரு பயங்கரமான சம்பவம் கதையாகக் கூறப்படுகின்றது.

விளையாட்டுப் போக்காக அந்த காலனிக்குள் செல்லும் அருள்நிதி மற்றும் நண்பர்கள், அதன் பின்னர் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பது தான் கதை.

திரைக்கதை

image

பேய் படம் என்று கூறிவிட்டதால், திரையரங்கு வரும் ரசிகர்கள் படத்தின் பெயர் போடுவது தொடங்கி திகிலாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இப்படத்தில் முதல் 1 மணி நேரம் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்துவதிலேயே கடந்து விடுகிறது.

பேய் வருமா? வராதா? என்று சலித்துப் போன ரசிகர்கள், வெளியே போய் ஒரு தம்மாவது போட்டுவிட்டு வரலாம் என எழும் நேரத்தில் தான், அருள்நிதியும் அவரது நண்பர்களும் டிமான்ட்டி காலனிக்குள் நுழையும் காட்சிகள் வருகின்றன. அங்கிருந்து தொடங்கும் விறுவிறுப்பு படம் முடியும் வரை நீள்கிறது.

திரைக்கதையின் இடையில் செருகப்பட்ட 19 நூற்றாண்டு ஃப்ளாஷ்பேக் மிகவும் ரசிக்க வைத்தது.

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை

demonte-colony-nearing-completion

 

படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னையை அதன் இயல்புடன் அப்படியே காட்டியிருக்கிறார். டாப் ஆங்கில் காட்சிகள் மிகப் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இரவு நேரத்தில் கடல் அலை சீற்றங்கள், அடைமழை போன்றவை மனதில் ஒருவித திகிலை ஏற்படுத்தத் தவறவில்லை.

படத்துக்கு கெபா ஜெரிமியா இசையமைத்துள்ளார். பின்னணி இசை அவ்வளவு ரசிக்கும் படியாக இல்லை.

படத்தில் வரும் டம்மி பீசு பாடலை டி.இமானும், வாடா வா மச்சி பாடலை அனிருத்தும் பாடியுள்ளனர். பாடல்களும் அவ்வளவாக மனதில் நிற்கவில்லை.

ரசித்தவை

19 நூற்றாண்டில் நடைபெறும் கதையும், காட்சிகளும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக டிமான்ட்டி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் வெள்ளைக்காரரின் முகபாவனைகளும், நடிப்பும் மிரட்டல்.

அருள்நிதி மற்றும் நண்பர்களின் நடிப்பு இரண்டாம் பாதியில் ரசிக்க வைத்தன.என்ன சாகப் போகிறோம் என்று தெரிந்தும் சாவகாசமாக வசனம் பேசுவதைக் குறைத்து நடிப்பில் சற்று விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.

சற்று நேரம் வந்தாலும், எம்எஸ் பாஸ்கரின் நடிப்பு அற்புதம். “உன் விதியை எழுதும் போது அகத்தியருக்கே கை நடுங்கியிருக்கும்” என்று சிரிப்பு வெடிகளைக் கொளுத்திப் போட்டிருக்கிறார்.

படத்தில் ஹீரோயினே இல்லை என்பது ஆச்சர்யம்.

பேய் ஒவ்வொருவரையாகக் கொல்லும் விதம் பயமுறுத்தியது. பேய் வருவதற்கு அறிகுறியாக கண்கள் வெள்ளையாவது மிரட்டல்.

சலித்தவை

Demonte-Colony-Stills-6

 

காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் பேய் கதை. இந்த கதையைக் கேட்டு பேய்க்கே சலித்திருக்கும். அந்த அளவிற்கு அதரபழசான கதைக்கரு.

முதல் பாதியில் ஏன் திரைக்கதையை அவ்வளவு ஜவ்வாக இழுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்துவதில் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்திருக்கலாம்.

மற்றபடி, சீரியஸான பேய்க்கதை வருவதில்லையே என்பவர்களுக்கு ‘டிமான்டி காலனி’ புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.

– ஃபீனிக்ஸ்தாசன்