ஐதராபாத், மே 23 – நடிகர் சூர்யா ஐதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்; “எவ்வளவு உயரத்துக்கு போனாலும் அடக்கமாக இருக்க வேண்டும் என்று, அப்பா சொல்லி தந்து இருக்கிறார். அதன்படிதான் வாழ்கிறேன். நடிகர், நடிகைகள் புகழ், வாழ்க்கை எல்லாமே நீர்க்குமிழி போன்றது. எந்த நேரத்திலும் உடைந்து விடும்”.
“கோடிக்கணக்கான மக்கள் எங்களை ரசிக்கிறார்கள். அதை பார்த்து அகங்காரம் வரக்கூடாது என்று எனது அப்பா சொல்லி தந்து இருக்கிறார். இவ்வளவு வரவேற்புகள் கிடைப்பதற்கு அதிர்ஷ்டம்தான் காரணம். ஏதோ ஒரு சக்திதான் இத்தனையும் வாங்கி தந்து இருக்கிறது என்பதை உணர வேண்டும்”.
“வெற்றி, தோல்வியை நான் சமமாகவே பார்க்கிறேன். கார்த்தியுடன் உங்களுக்கு போட்டியா? என்று கேட்கிறார்கள். கார்த்தியை பொறுத்தவரை என்னைவிட திறமைசாலி. படத்தின் திரைக்கதை, காட்சி அமைப்பு, படப்பிடிப்பு எல்லாவற்றிலும் கார்த்தி திறமையாக வருவதை கண்டு வியந்து இருக்கிறேன்”.
“இயக்குநராக வேண்டும் என்ற ஆசைதான் கார்த்தியிடம் இருந்தது. அதற்காகவே இயக்குநர் மணிரத்னத்திடம் இணைந்து உதவி இயக்குனர் பயிற்சி பெற்றார். ஆனால் சந்தர்ப்பமும், சூழ்நிலையும் நடிகனாக்கி விட்டது”.
“ஜோதிகாவை வைத்து ‘36 வயதினிலே’ படத்தை தயாரித்தேன். இந்த படத்துக்கு பாராட்டுகள் குவிகிறது. ஜோதிகா நடிப்பையும் நிறைய பேர் பாராட்டுகிறார்கள். இந்த படத்தை தெலுங்கிலும் வெளியிட உள்ளோம்” என சூர்யா கூறினார்.