Home நாடு “ம இ கா வழக்கு: தீர்ப்பு அதிர்ச்சி முடிவாக அமையலாம்! சுப்ராவின் கரம் வலுப்படுமா?” –...

“ம இ கா வழக்கு: தீர்ப்பு அதிர்ச்சி முடிவாக அமையலாம்! சுப்ராவின் கரம் வலுப்படுமா?” – தமிழ்மணி கண்ணோட்டம்

768
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 25 – (எதிர்வரும் மே 27ஆம் தேதி மஇகாவுக்கும், சங்கப் பதிவிலாகாவுக்கும் இடையிலான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அது குறித்த தனது கண்ணோட்டத்தை வழங்குகின்றார் மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி ) 

Tamil Maniம இகா வின், கடந்த காலம், நிகழ்காலம்,  எதிர் காலம் குறித்து தீர்க்கமான முடிவுக்கு வர எதிர்வரும் 27 ஆம் தேதி நீதிமன்றம் அறிவிக்கப்போகிற தீர்பபு அதிரடியாக அமையப்போகிறது. இதனால் நடப்புத் தலைவரான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அதிர்ச்சி தரும் முடிவை அன்று எதிர்பார்க்கலாம்.

இதனால் ம இகா வின் எதிர்காலம் திட்டவட்டமாக நடப்புத் துணைத்தலைவரான டத்தோஸ்ரீ சுப்ரமணியத்தின் கையில் ஐக்கியமாகப்  போவது உறுதியென்று ம இ கா வட்டாரம் உறுதிப்படுத்துகிறது.

#TamilSchoolmychoice

நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக இருக்கும் – அப்படி அமையுமேயானால், பழனி அமைக்கப்போகும் நிழல் அமைச்சரவையில் யார் யாரெல்லாம் இடம் பெறலாம் என்று ஒரு வட்டம், சொடுக்குப் போட்டுக் கொண்டிருக்கும் வேளையில்தான்,  இந்த 27ஆம் தேதி தீர்ப்பு, அதி்ரடி வைத்தியத்தை பழனி தரப்புக்கு தரப்போகிறது.

subra-health-dentists-1அதாவது செலவுத் தொகையுடன் வழக்கு தள்ளுப்படியாகும் என்றே தெரிகிறது என வழக்கறிஞர் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த அதிரடி நிகழுமானால் ம இ கா வின் பதிவு அடுத்து ரத்தாகும் நெருக்கடியை கட்சி சந்திக்கலாம்.

சுமுகமாக தீர்த்துக் கொண்டுப் போக வேண்டிய கட்சிப் பிரச்சினையை நீதிமன்றம் வரை கொண்டு வந்து, சங்கங்களின் பதிவு இலாகாவை நீதி மன்றத்தில் நிறுத்தி, கடந்த ஆறு மாதகாலமாக கட்சி நிர்வாகத்தையும் நாடு முழுமைக்குமான கட்சியின் செயல் நடவடிக்கையும் முடக்கிப்போட்ட பழனிக்கு, இந்த அதிரடித் தீர்ப்பு அவரின் அரசியல் எதிர்காலத்தையே படுமோசமாக பின்னுக்குத் தள்ளிவிடப்போகிறது.

பதிவு இலாகாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சங்கங்களின் பதிவுச் சட்டத் துணைவிதிகளான 18 ஏ,பி,சி,யும் – 16 ஏ,பி,சி யும்- 13 ஏ,பி,சியும் பெருமளவு சுற்றிச் சுற்றி வருவதால் பலதரப்பட்ட சட்டச்சிக்கலை இவ்வழக்கு தொடக்கத்திலிருந்து சந்தித்து வருகிறது.

கடந்த ஆறுமாத காலமாக நீதி மன்றத்தில் பதிவான இந்த வழக்கால், இறுதி தீர்ப்பை அறிவதில் ம இ கா உறுப்பினர்கள் ஆர்வம் காட்டி வந்துள்ளனர். அதனால் 27ஆம் தேதி வழங்கப்படும் தீர்ப்பில் பிரிவு 13/பி யின் படி கட்சியின் பதிவு ரத்தாகும் சூழ்நிலைக்கு நிச்சயம் தள்ளப்படும் என்று தெரிகிறது.

Palanivel MIC Presidentகட்சியின் பதிவை ரத்தாகும் சூழ்நிலைக்கு கொண்டு வந்துவிட்ட,  பழனி தொடர்ந்து தலைவராக நீடிக்க சாத்தியப்படுமா? அதனால் துணைத் தலைவரான டாக்டர் சுப்ராவே கட்சியின் தலைமையை ஏற்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

2013 மலாக்காவில் பழனி தலைமையேற்று நடத்திய ம இ கா தேர்தலில் ஒரு தரப்பு அதிருப்தி கொண்டு சங்கங்களின் பதிவு இலாகாவில் செய்த புகாரை, பதிவு இலாகா மேற்கொண்ட விசாரணையில் முறைகேடு நடந்துள்ளது என்று கண்டு பிடிக்கப்பட்டதன் எதிரொலியால் மறுதேர்தலுக்கு  ம இ கா உட்படுத்தப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

எனவே பதிவு இலாகா மறுதேர்தலுக்கு உத்தரவிட்டதில் அதிருப்தி கொண்ட பழனியும் அவருடன் டத்தோ பாலகிருஷ்ணன், டத்தோ சோதிநாதன்,பிரகாஷ்ராவ், இராமலிங்கம் என ஐவரும் பதிவு இலாகாவுக்கு எதிராக இந்த வழக்கை தொடுத்துள்ளனர்.

அதேவேளை இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க மூன்றாம் தரப்புவாதிகளாக டத்தோ சரவணன், டத்தோ விக்னேஸ்வரனும் நுழைந்துள்ளனர்.

ஆனால் இந்த வழக்கு 27ஆம் தேதி முழுமையாக தள்ளுப்படியாகுமானால், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருமே செலவு தொகையைச் செலுத்த வேண்டி வரலாம். இதில் பழனி தரப்பும் சங்கப் பதிவகத்துக்கு எதிராகவும், உள்துறை அமைச்சருக்கு எதிராகவும் வழக்கு தொடுத்ததற்காக பெரும் தொகையை செலவுத் தொகையாக செலுத்த வேண்டியும் வரலாம் என்று சில சட்டவல்லுனர்கள் கோடிட்டுக் காட்டுகின்றனர்.

பொதுவாக அரசியல் கட்சிகளுக்கு நீதிமன்றத்தில் இடமில்லை என்ற பொது கோணமே இவ்வழக்கில் முக்கியமாகப் பார்க்கப்படும் என்று தெரிகிறது. அதனால் ம இ கா விவகாரத்தை நீதிமன்றத்திறகு கொண்டு வந்தது சட்டமீறலான ஒரு விசயமாகவே இவ்வழக்கில் கொள்ளப்படும் என்று சில சட்டவல்லுனர்கள் குறிப்பிடுவதால், இந்த வழக்கைப் பொறுத்த வரைக்கும் பழனி தரப்புக்கு அதிர்ச்சி தரும் வகையில் அமையும் என்பதில் மாறுபாடு இருக்கப் போவதில்லையென்றே தெரிகிறது.

– பெரு.அ.தமிழ்மணி

(இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளர் பெரு.அ.தமிழ்மணியின் சொந்த, தனிப்பட்ட கருத்துகளாகும். அந்தக் கருத்துகள் செல்லியலின் கருத்துகளோ, செல்லியலைப் பிரதிபலிக்கும் கருத்துகளோ அல்ல. கட்டுரையாளரின் கருத்துகளுக்கு செல்லியல் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.

இந்த கட்டுரையையோ, அல்லது அதன் பகுதிகளையோ மறுபிரசுரம் செய்ய வேண்டுமென்றால், கட்டுரையாளரை நேரடியாகத் தொடர்பு கொண்டு அனுமதி பெறவேண்டும்.

 தமிழ்மணியின் மற்ற எழுத்துப் படிவங்களை maravan madal tamil mani என்ற முகநூல் (பேஸ்புக்)  அகப்பக்கத்தில் காணலாம். அவரைப் பின்வரும் இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:

 wrrcentre@gmail.com