கரூர், மே 27 – ஜெயலலிதா விடுதலையானதை அடுத்து தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 5000 பேருடன் மொட்டை போட்டு கரூர் மாரியம்மனுக்கு அக்னிச்சட்டி ஏந்தி சாமி தரிசம் செய்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற நாள் முதல் அவரது விடுதலைக்காக அதிமுகவினர் கோவில் கோவிலாகச் சென்று வேண்டிக்கொண்டனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை ஆனார்.
அவர் மீண்டும் முதல்வராகக் கடந்த 23-ஆம் தேதி பதவியேற்றார். இதையடுத்துப் பல்வேறு கோயில்களிலும் அதிமுகவினர் மொட்டை அடித்துத் தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்த வேளையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோது கோவில் வழிபாடு, சிறப்புப் பூஜை, யாகம், ரத்ததானம், காவடி தூக்குதல், அக்னிச் சட்டி எடுத்தல், பிரமாண்ட விளக்குப் பூஜை என அடுத்தடுத்து செய்து வந்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து கரூர் மாரியம்மன் கோயிலில் செந்தில்பாலாஜி, தலைமையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் திரண்டு, கரூர் அமராவதி ஆற்றில் மொட்டை அடித்துக் கொண்டனர்.
பின்னர் கரூர் அமராவதி நதியில் இருந்து சண்டமேளங்கள் முழங்க ஆரவாரத்துடன் புடை சூழ, கையில் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாகச் சென்றுள்ளனர்.
அமைச்சர்கள் அனைவரும் மொட்டை போட்டு வருவதால் இனி மொட்டை அமைச்சர்களை மட்டுமே சில மாதங்களுக்குக் காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.