கோலாலம்பூர், மே 27 – மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சுமார் 20,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக நேற்று அறிவித்தது.
இது குறித்து பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்துள்ள மைஃபே இயக்கத் தலைவர் டத்தோ கீதாஞ்சலி ஜி, “எந்த ஒரு அரசு சார்ந்த நிறுவனமும் இது போன்று மிகப் பெரிய அளவிலான பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டதில்லை. பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களது ஊழியர்களுக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கண்டிப்பாகத் தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ரமலான் மாதம் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், பணி நீக்கங்களைச் செய்தால், அந்த ஊழியர்கள் எப்படித் தங்களது குடும்பச் செலவுகளை ஈடுகட்டுவார்கள்? எப்படிப் புதிய வாழ்க்கையைத் தொடங்குவார்கள்? ஓய்வூதியங்களைப் பெற்றுப் புதிய தொழில் தொடங்கவோ அல்லது கடன்களைக் கட்டவோ அவர்களால் இயலுமா? எனவே அரசாங்கம் உடனடியாக அவர்களுக்கு ஒரு நல்ல வழி காட்ட வேண்டும். அவ்வளவு எளிதில் அவர்களைக் கைகழுவிடாது என்று நம்புகின்றேன்” இவ்வாறு கீதாஞ்சலி தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
நஷ்டத்தில் இருந்து மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களை மீட்டுக்கொள்ள சுமார் 20000 ஊழியர்களுக்கு இன்று பணி நீக்கக் கடிதத்தை வழங்க முடிவெடுத்துள்ளதாக நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
– ஃபீனிக்ஸ்தாசன்