மே 27 – மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் பார்லிக் கஞ்சியும் ஒன்று. இது ஒரு அற்புதமான சத்துப்பொருளாக இருக்கிறது. இதற்கு வாற்கோதுமை என்று மற்றொரு பெயரும் உண்டு.
100 கிராம் பார்லி அரிசியில் 3.3 கிராம் அளவு புரதச்சத்து அடங்கியிருக்கிறது. மற்றும் 0.4 சதவீதம் கொழுப்புச் சத்தும், 19.7 சதவீதம் சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளது. பாஸ்பரசும் இரும்புச் சத்தும் தாராளமான அளவிலேயே உள்ளன.
100 கிராம் பார்லியில் 270 கலோரி, 54.4 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. குழந்தைகளுக்குக் காபி – டீ போன்ற பானங்களைக் கொடுப்பதை விட பார்லிக் கஞ்சியைத் தொடர்ந்து கொடுக்கலாம். கொழுப்பை அழிப்பதற்கு இந்தக் கஞ்சி ஒரு சிறந்த மருந்து.
இதை அடிக்கடி சாப்பிடுவது மூலம் நரம்புகள் வலுப்படும். குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லிக் கஞ்சி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாகக் காய்ச்சிக் குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும்.
உடல் வறட்சியைப் போக்க வல்லது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியைச் சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலைத் தடுக்கும்.
வெப்பநிலையைச் சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.
பார்லி அரிசியை எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் காய்ச்சி, பாதியாகச் சுண்டியவுடன் அந்தக் கஞ்சியுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறும், சர்க்கரையும் சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக்கும்.
கெட்ட கொழுப்பைப் போக்கி நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்வதில் பார்லி அரிசி சிறந்து விளங்குகிறது. பார்லியில் உள்ள பீட்டோ குளுக்கான் என்ற நார்ச்சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. பார்லியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
பார்லியில் உள்ள வைட்டமின் பி, நரம்புகளைப் பலப்படுத்தும். தினமும் ஒரு வேளை பார்லி அரிசிக்கஞ்சி அருந்தினால் கொழுப்பு கணிசமாகக் குறைந்து உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.