நியூசிலாந்து, மே 27- எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தனது தலையில் அணிந்திருக்கும் தலைப்பாகையைக் கழற்ற மாட்டார்கள் சீக்கிய மதத்தினர். அப்படிச் செய்வது தமது மதக் கொள்கைக்கு எதிரானது என்பது அவர்களது தீவிரமான நம்பிக்கை.
இந்த மத நம்பிக்கையைத் தகர்த்து ஒரு சிறுவனுக்கு உதவியிருக்கிறான் சீக்கிய மாணவன் ஒருவன். “ஆபத்திற்குப் பாவம் இல்லை” என்பதைத் தன் நடவடிக்கையால் நிரூபித்திருக்கிறான் அந்தக் கருணை உள்ளம் படைத்த சீக்கிய மாணவன்.
நியூசிலாந்தில் நடந்த சாலை விபத்து ஒன்றில் சிக்கிய சிறுவனைக் காப்பாற்றுவதற்காகச் சற்றும் யோசிக்காமல் தனது தலைப்பாகையைக் கழற்றி, அந்தத் துணியால் சிறுவனைச் சுற்றி மருத்துவமனைக்கு அனுப்ப உதவியிருக்கிறான்.
ஆக்லாந்தில் படித்து வரும் ஹர்மன் சிங் (22) என்ற சீக்கிய மாணவன், தனது வீட்டில் இருந்த போது, சாலையில் விபத்தில் சிக்கிய சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்றான்.
சிறுவனுக்கு அடிபட்டு ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஹர்மன் சிங், தனது தலைப்பாகையைக் கழற்றிச் சிறுவனுக்கு அடிபட்ட இடத்தில் கட்டி, அவனை மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தான். இதைக் கண்டு அங்கிருந்த அனைவரும் அவனை மனமாரப் பாராட்டினர்.
இதுகுறித்துச் செய்தி அறிந்த ஊடகங்கள், ஹர்மன் சிங்குக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளன. அதைத் தொடர்ந்து அவனுக்குப் பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சிறுவனின் பெற்றோரும் ஹர்மன் சிங்குக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.