சென்னை, மே 27 – சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் போட்டியிடாதது குறித்து விளக்கமளித்துள்ள கருணாநிதி நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தில் செல்வாக்குப் பெற்றவர் ஆட்சி நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கடந்த 17-ஆம் தேதி ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்த பத்தே நாட்களில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது.
இந்த அளவுக்குத் தேர்தல் ஆணையத்திடம் செல்வாக்குப் பெற்றவர் ஆட்சியில் தேர்தல் நடந்தால் அது எப்படி இருக்கும் எனக் கருணாநிதி வினவியுள்ளார்.
மேலும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணம் எப்படி விளையாடியது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தானே என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீரங்கம் தேர்தலின் போது காவல்துறை நடந்து கொண்டதைப் பார்க்கவில்லையா என்றும் அவர் கேட்டுள்ளார்.
மேலும் இடைத்தேர்தலில் ஜனநாயகம் எந்த அளவுக்கு மதிக்கப்படும் எனத் தெளிவாகத் தெரிகிறது. சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் ஓராண்டுக்குள் நடைபெற உள்ளது. ஆதலால் இடைத்தேர்தலைத் தவிர்க்க முடிவு செய்திருப்பதாகவும் கருணாநிதி கூறியுள்ளார்.