புதுடெல்லி, மே 28 – ஏர் இந்தியா நிறுவனத்தில் தாமதமாக வேலைக்கு வந்த 17 விமான பணிப்பெண்கள் அதிரயாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏர் இந்தியா நிறுவனம் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விமான பணிப்பெண்கள் குறிப்பிட்ட நேரத்தில் வருவது மற்றும் விமானங்களை தாமதமின்றி இயக்குவது என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஏர் இந்தியா நிறுவன வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பிரச்சனைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இதில், விமான பணிப்பெண்கள் சிலர் தாமதமாக பணிக்கு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே பல விமானங்கள் தாமதமாக புறப்படுவதற்கு விமான பணிப்பெண்கள் தாமதமாக வருவது தான் காரணம் என்று பயணிகள் புகார் தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து தாமதமாக பணிக்கு வருதல் மற்றும் விமான நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காதவர்கள் குறித்து தகவல்கள் பெறப்பட்டது.
இதில் பல விமான பணிப் பெண்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவில்லை என்பது தெரிய வந்ததுள்ளது. இவர்களில் 17 விமான பணிப்பெண்கள் 3 முறைக்கு மேல் வேலைக்கு தாமதமாக வந்தது தெரிய வந்தது.
இதனால், விமான சேவை பாதிக்கப்பட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து வேலைக்கு தாமதமாக வந்த 17 விமானப் பணி பெண்களும் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.