மணிலா, மே 28 – பிலிப்பைன்ஸை சேர்ந்த பெண் ஒருத்தி தனது பச்சிளம் குழந்தையை, நாய் போல் கயிற்றில் கட்டி, அதனை புகைப்படமாக எடுத்து சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் தான் பெற்ற குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்டார். ஆடை எதுவும் அணிவிக்கப்படாத குழந்தையின் கழுத்தில் கயிறு ஒன்று கட்டப்பட்டுள்ளது. குழந்தையின் அருகே தட்டில் உணவும் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் சற்றே அதிர்ச்சியுற்றனர்.
பெற்ற குழந்தையை நாய் போல் நடத்திய விதம் சமூக ஆர்வலர்கள் பலரால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அயர்லாந்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் லர்லீன், பிலிப்பைன்ஸ் தாய் குறித்து அமெரிக்காவில் உள்ள சட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் பிலிப்பைன்ஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அந்த பெண்ணை கைது செய்யும்படி வலியுறுத்தினர். தான் செய்த தவறின் தீவிரத்தை உணர்ந்த தாய், உடனடியாக காவல்துறையிடம் சரணடைந்தார்.
தான் இதனை வேண்டுமென்றே செய்யவில்லை என்றும், விளையாட்டாக செய்த ஒன்றுக்கு இவ்வளவு எதிர்ப்புகள் ஏற்படுமென்று உணரவில்லை என்றும் அவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் லர்லீன் கூறுகையில், “அவர் இதனை விளையாட்டாக செய்ததாக கூறினாலும், அவரின் விளையாட்டை உணர்ந்து கொள்ளும் வயது குழந்தைக்கு இல்லை. அந்த புகைப்படத்தை பார்த்த எனக்கு மிகுந்த கோபமும், அந்த குழந்தையின் மீது அளவில்லாத அனுதாபமும் ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.