மும்பை, மே 31 – பலாத்காரம் செய்யப்பட்டதால் 42 வருடங்களாக சுயநினைவை இழந்து உயிருக்குப் போராடி கடைசியில் மரணமடைந்த மும்பை தாதி அருணா ஷான்பாக்கை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய சக ஊழியர் சோகன்லால் பர்தா வால்மீகி, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் ஒன்றில் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் 7 வருட சிறை தண்டனை பெற்று பின் விடுலையான அவன், அருணா தற்போது இறந்ததால் கொலை செய்த குற்றத்திற்காக மீண்டும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
1973-ம் ஆண்டு இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவத்தில் மருத்துவமனையில் பணியில் இருந்த 23 வயது தாதியான அருணா ஷான்பாக், சக ஊழியர் சோகன் லால் பார்த்தா வால்மீகி என்பவனால் மிகக் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டார்.
வால்மீகியின் மிருகத்தனமான தாக்குதலால் சுயநினைவை இழந்த அருணா, 42 வருடங்களாக உயிருக்குப் போராடினார். எனினும், அவருக்கு கடைசி வரை சுயநினைவு திரும்பவே இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு படுக்கையிலேயே அவர் மரணமடைந்தார்.
இந்நிலையில், அருணா வழக்கில், திருட்டு, தாக்குதலுக்கு மட்டும் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற வால்மீகி, விடுதலைக்குப் பின் என்ன ஆனான் என தெரியாமலேயே இருந்து வந்தது. இதற்கிடையில், உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டம், பர்பா கிராமத்தில் வால்மீகி வாழ்ந்துவருவதாக சமீபத்தில் மராத்தி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. மேலும், அவனை பேட்டியும் எடுத்து இருந்தது. அந்த பேட்டியில், தன் மீதான பாலியல் புகாரை அவன் கடுமையாக மறுத்துள்ளான்.
இதற்கிடையே, மும்பை காவல் துறையினர் அவனது தாக்குதலால் அருணா 42 வருடங்களுக்குப் பிறகு இறந்து இருந்தாலும் இதனை கொலை வழக்காக பதிவு செய்ய ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, வால்மீகி மீண்டும் கைது செய்யப் பட வாய்ப்புள்ளது. அதே சமயத்தில், அருணா, நிமோனியா காய்ச்சல் காரணமாக மரணம் அடைந்து இருப்பதால், அதனை கொலை வழக்காக பதிவு செய்ய முடியாது என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.