Home தொழில் நுட்பம் ‘இணையம்’ சொல்லை உருவாக்கியது மலேசியர்களா? சிங்கப்பூரர்களா? தமிழ் இணைய மாநாட்டில் சர்ச்சை!

‘இணையம்’ சொல்லை உருவாக்கியது மலேசியர்களா? சிங்கப்பூரர்களா? தமிழ் இணைய மாநாட்டில் சர்ச்சை!

833
0
SHARE
Ad

சிங்கப்பூர், மே 31 – நேற்று சிங்கப்பூரில் தொடங்கிய உலகத் தமிழ் இணைய மாநாட்டில் இண்டர்நெட் என்பதற்கு ஈடான புதிய சொல்லாக இன்று பரவலாகப் பயன்படுத்தப்படும் ‘இணையம்’ என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கியது சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள்தான் எனத் தமிழகப் பேராளர் டாக்டர் எம்.பொன்னவைக்கோ (படம்) முன்வைத்துள்ள கருத்தைத் தொடர்ந்து, பலத்த சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.

Ponnavaiko M. Dr

டாக்டர் பொன்னவைக்கோ தமிழகப் பல்கலைக் கழகம் ஒன்றின் இணை வேந்தருமாவார்.

#TamilSchoolmychoice

டாக்டர் பொன்னவைக்கோ 14வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் படைக்கும் கட்டுரையொன்றில் கீழ்க்காணும் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். பின்னர் உலகத் தமிழ் இணைய மாநாட்டில் உரையாற்றிய போதும் இந்தக் கருத்தை மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றார்.

அவரது இந்தக் கருத்து, நட்பு ஊடகங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, ‘இணையம்’ என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கியதும், பயன்படுத்தியதும் மலேசியர்கள்தான் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

டாக்டர் பொன்னவைக்கோ கருத்து பக்கம்

இணையம் என்ற சொல்லை உருவாக்கியது சிங்கப்பூரர்கள் என்ற கருத்து சிங்கப்பூர் உலகத் தமிழ் இணய மாநாட்டில் கலந்துகொண்ட மலேசியப் பேராளர்களிடையே பலத்த அதிருப்தி அலைகளைத் தோற்றுவித்துள்ளது.

ஆதி.இராஜகுமாரன் உருவாக்கிய சொல் ‘இணையம்’

‘செல்லியல்’ இணைய செய்தித் தளத்தைத் தொடர்பு கொண்ட,14வது உலகத் தமிழ் இணைய மாநாட்டின் பேராளர் ஒருவர், நட்பு ஊடகங்களில் இந்த சர்ச்சை பகிரப்பட்டும், கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டும் வருவதாகவும் குறிப்பிட்டார்.

“எங்களுக்குத் தெரிந்து பல ஆவணங்களிலும், கட்டுரைகளிலும் ஏற்கனவே தெளிவாகப் பல முறை தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து என்னவென்றால், இணையம் என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கியது மலேசியாவிலிருந்து வெளிவரும் நயனம் வார இதழின் ஆசிரியர் ஆதி.இராஜகுமாரன்தான். பலராலும் ஏகமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்ட ஒரு கருத்துக்கு மாறாக, இப்போது மட்டும் டாக்டர் பொன்னவைக்கோ ஏன் இந்த புதிய கருத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றார் எனத் தெரியவில்லை” என்றும் அந்தப் பேராளர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சிங்கையில் நேற்று தொடங்கி நடைபெற்று வரும் உலகத் தமிழ் இணைய மாநாட்டில் மலேசியப் பேராளர்களிடையே தங்களின் பங்களிப்பு புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து அதிருப்தி நிலவுகின்றது.

(பின்குறிப்பு: இந்த சர்ச்சை குறித்து வாசகர்களின் மாற்றுக் கருத்து ஏதும் இருப்பின் தாராளமாக எங்களுக்கு அனுப்பலாம். நிச்சயம் அவற்றை செல்லியலில் இடம் பெறச்செய்வோம்)