Home வணிகம்/தொழில் நுட்பம் ‘ஸ்னாப்சேட்’ நிறுவனத்திற்கு குவியும் அந்நிய முதலீடு!

‘ஸ்னாப்சேட்’ நிறுவனத்திற்கு குவியும் அந்நிய முதலீடு!

856
0
SHARE
Ad

Snapchatலாஸ் ஏஞ்சல்ஸ், மே 31 – ‘ஸ்னாப்சேட்’ (Snapchat) நிறுவனத்திற்கு அந்நிய நிறுவனங்களிடமிருந்து பல மில்லியன் டாலர்களில் முதலீடுகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது வரை அந்நிறுவனத்திற்கு சுமார் 537 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டு நிதியாக குவிந்துள்ளது. இதனை அந்நிறுவனத்தின் தலைவர் இவான் ஸ்பைகல் உறுதி செய்துள்ளார்.

காணொளி மற்றும் படங்கள் மூலம் குறுந்தகவல் அனுப்பப் பயன்படும் செயலியான ஸ்னாப்சேட், கடந்த 2011-ம் ஆண்டு வெளியானது. ஐஒஎஸ், அண்டிரொய்டு என அனைத்து தளங்களிலும் மேம்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது வரை 100 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ள இச்செயலி வரும் காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் ஸ்னாப்சேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி இவான் ஸ்பைகல் சமீபத்தில் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய வருமாறு உலக நிறுவனங்களுக்கு பொது அழைப்பு விடுத்தார். மேலும் அவர், இது தங்கள் நிறுவனத்திற்கு மிக முக்கியத்துவமான காலகட்டம் என்றும் அறிவித்து இருந்தார். அதனை ஏற்ற உலக நிறுவனங்கள் ஸ்னாப்சேட்டில் அதிக அளவில் முதலீடுகளைக் குவித்து வருகின்றன.

#TamilSchoolmychoice

சீனாவின் இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா மட்டும் 200 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது வரை சுமார் 537 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டு நிதியாக குவிந்துள்ளது. ஸ்னாப்சேட் நிறுவனத்தின் இலக்கான 650 மில்லியன் டாலர்கள் என்பது மிக விரைவில் எட்டக் கூடிய இலக்காக உள்ளதால், அந்நிறுவனம் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கத் துவங்கி உள்ளது.

ஆரம்பக் கட்டத்தில் காணொளி மற்றும் படங்கள் மூலம் குறுந்தகவல் மட்டும் அனுப்பப் பயன்பட்ட ஸ்னாப்சேட் செயலி, அதன் பின்னர் பணப்பரிவர்த்தனைகளுக்கும் பயன்படத் துவங்கியது. இதன் வளர்ச்சியை உணர்ந்து தான் பேஸ்புக் ஆரம்பக்கட்டத்தில் இந்நிறுவனத்தை வாங்க பல்வேறு முயற்சிகளை எடுத்தது. எனினும், அந்த முயற்சி பின்னாளில் கைவிடப்பட்டது.