கோலாலம்பூர், மே 31 – நேற்று சிங்கையில் தொடங்கிய 14வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் ‘இணையம்’ என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கியது சிங்கப்பூரர்கள்தான் என தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் பொன்னவைக்கோ கூறியுள்ளதைத் தொடர்ந்து எழுந்துள்ள சர்ச்சையில் நயனம் வார இதழின் ஆசிரியர் ஆதி.இராஜகுமாரன் தனது தரப்பு விளக்கத்தையும் வாதத்தையும் தெரிவித்துள்ளார்.
அவரது முழு விளக்கம் பின்வருமாறு:-
“வணக்கம். இணையம் என்ற சொல்லை உருவாக்கியது நான்தான். திரு முத்து நெடுமாறன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் இந்தச் சொல்லை உருவாக்கினேன்.
திரு முத்து நெடுமாறன் அவர்கள் இணையம் என்ற பெயரை உலகம் முழுதும் கொண்டு சென்றார். இப்போது aps எனப் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தில், ‘செயலி’ என்ற சொல்லை software என்ற சொல்லுக்கு ஈடாகவும், mouse என்பதற்கு ‘சுழலி’ என்ற சொல்லையும் பல ஆண்டுகளுக்கு முன் நான் உருவாக்கினேன்.
www (Worldwide Web) என்பதற்கு “வையக விரிவு வலை” என்ற சொல்லைத் தந்ததும் ஒரு மலேசியர் தான். அவர் டாக்டர் ஜெயபாரதி என்று நினைக்கிறேன். கணினி உலகில் நல்ல தமிழ் சொற்கள் வேண்டும் என்று தீவிரமாக இருந்தவர் திரு முத்து நெடுமாறன். இந்த சிந்தனையை உருவாக்கியவர் திரு முத்து நெடுமாறன். முன்பு ஜெர்மனியிலும் இப்போது மலேசியாவிலும உள்ள முனைவர் கண்ணன், ஆஸ்திரேலியாவில் உள்ள திரு பாலாபிள்ளை போன்றவர்களுக்கும் இந்த வரலாறு தெரியும்.
நன்றி. அன்புடன்,
ஆதி. இராஜகுமாரன்.