கோலாலம்பூர், மே 31 – மலேசியாவில் பணியாற்ற வரும் இந்தோனிசிய வீட்டுப் பணிப்பெண்களுக்கு இனி 1200 ரிங்கிட் ஊதியம் அளிக்க வேண்டுமென அந்நாட்டு அரசு மலேசிய மனிதவள அமைச்சிடம் பரிந்துரைத்துள்ளது.
தற்போது இந்தோனிசிய வீட்டுப் பணிப்பெண்களுக்கான ஊதியம் 800 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூரில் உள்ள இந்தோனிசிய தூதரகம்
“பிற நாடுகளில் வழங்கப்படும் ஊதியத்தைவிட மலேசியாவில் குறைவாகவே வழங்கப்படுகிறது. எனவேதான் 1200 வெள்ளியாக ஊதியத்தை உயர்த்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளோம்,” என்று மலேசியாவுக்கான இந்தோனிசிய துணைத் தூதர் கூறினார்.
கடந்த மே மாதம் இரு நாடுகளின் மனிதவள அமைச்சுக்களின் கலந்தாலோசனையின் போது இந்தப் பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், வீட்டுப் பணிப் பெண்களுக்கான ஆவண நடைமுறையை மலேசிய அரசு மேலும் எளிமைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
“மேலும் ஒவ்வொரு வீட்டுப் பணிப்பெண்ணுக்கும் 1800 ரிங்கிட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை ரத்து செய்ய வேண்டும். பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மலேசிய தரப்பின் கருத்துக்களுக்காக காத்திருக்கிறோம்,” என்றார் துணைத் தூதர்.
இந்தோனிசியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண் வேலைக்கு செல்வது தடுத்து நிறுத்தப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.