சீனா, ஜூன் 1 – சூரிய ஒளி மின்சக்தியில் இயக்கப்படும் விமானம் இரண்டாவது கட்டமாக சீனாவில் இருந்து ஹவாய் தீவுக்கு தனது பயணத்தை துவங்கியுள்ளது. சீனாவின் நான்ஜிங் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் 8,200கிமீ தூரம் பயணித்து ஹவாய் தீவை அடைகிறது.
சுமார் 6 நாட்கள் பயணிக்கும் வகையில் திட்டமிடப்பட்ட விமான பயணம் மிகவும் சிக்கலானது என விமானி ஆண்ட்ரி போர்ச்பேர்க் தெரிவித்துள்ளார்.
பருவ நிலை மாற்றத்தை பொருத்து விமானம் பயணிப்பது திட்டமிடப்படும் எனவும், இது சவாலானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிப்பொருள் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதை தவிர்க்கும் வகையில் முற்றிலும் சூரிய ஒளி மின்சக்திகளில் இயங்கும் வகையில் இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் கடந்த மார்ச் மாதம் அபுதாபியில் இருந்து பயணத்தை தொடங்கியது.
ஓமன், இந்தியா, மியான்மர், சீனா மற்றும் அமெரிக்கா வழியாக ஜூலை மாத இறுதியில் மீண்டும் அபுதாபிக்கு வந்து சேரும் வகையில் பயணத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என விமானி ஆண்ட்ரி போர்ச்பேர்க் தெரிவித்தார்.