பெங்களுரூ, ஜூன் 1 – ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விரைவில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திரா, ரோஷன் பேக் மற்றும் உள்துறை அமைச்சரான கே.ஜே.ஜார்ஜ், வீட்டு வரித்துறை அமைச்சர் அம்பிரிஷ் ஆகிய முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது அனைத்து அமைச்சர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒருமித்த கருத்தாக ஒப்புதல் அளித்தனர்.
வழக்கறிஞர்கள் பி.வி.ஆச்சார்யா, சந்தேஷ் சவுடா உச்சநீதிமன்றத்தில் ஆஜராவார்கள். அரசு தலைமை வழக்கறிஞர், சட்டச் செயலாளர் கருத்தை ஏற்று மேல்முறையீடு செய்வதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
பெங்களுரூ சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆடு சிறை தண்டண விதித்து உத்தரவிட்டது. 4 ஆண்டு தண்டனையை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பல்வேறு தரப்பும் வலியுறுத்தினர்.
மேலும் ஜெயலலிதா வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜரான ஆச்சார்யா மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியிருந்தார். அனைத்து தரப்பு கோரிக்கையை ஏற்று மேல்முறையீட்டுக்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.