பாடாங் பெசார், ஜூன் 2 – மலேசியா-தாய்லாந்து எல்லையில் இருக்கும் பாடாங் பெசார் குடியேறிகள் முகாம்களில் உள்ள ரோஹின்யா பெண்கள், முகாம் பாதுகாவலர்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாகவும், அவர்களை பாலியல் அடிமைகள் போல் நடத்துவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி அந்த முகாமில் தங்கி இருந்த நூர் கைதா அப்துல் ஷுகூர் கூறுகையில், “தினமும் இரவு இரண்டு அல்லது மூன்று ரோஹின்யா பெண்கள் பாதுகாவலர்களால் ரகசியமான இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படுவர். அங்கு அவர்கள் அந்த கும்பலால் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதன் காரணமாக இரண்டு பெண்கள் தற்போது கற்பமாகி உள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “பல நாட்கள் எங்கள் பெண்கள் அந்த பாதுகாவலர்களால் வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். அங்கு அவர்களுக்கு நடக்கும் அவலங்கள் சொல்லிமாளாது. நாங்கள் திரும்பி வந்து விடப்படும் பெண்களுடன் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படும்.”
“இந்த முகாம்களில் நான் கடந்த வருடம் முதல் இருந்து வருகிறேன். நான் உட்பட 5 பெண்களுக்கு குழந்தைகள் இருப்பதால் அவர்கள் எங்களை இதுவரை ஒன்றும் செய்யவில்லை. எனினும், நான் பயத்தின் காரணமாக ஒவ்வொரு நாளையும் பிரார்த்தனைகள் மூலம் கழித்துக் கொண்டிருக்கிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது கணவர் நூருள் அமினுடன் அந்தமான் கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட நூர் கைதா பல மாதங்களாக குடியேறிகள் முகாம்களில் இருந்து வருகிறார். ரோஹின்யா பெண்களுக்கு நடத்தப்படும் கொடுமைகளை நூருள் அமினு ஒப்புக்கொண்டுள்ளார்.
மியான்மரில் நடக்கும் கொடுமைகளில் இருந்து தப்பித்து ஏதோ ஒரு நம்பிக்கையில், ஆபத்தான கடல் பயணத்தை தாண்டி வந்தவர்களை, குடியேறிகள் முகாம்களில் உள்ள அதிகாரிகளும், பாதுகாவலர்களும் நடத்தும் விதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
‘வேலியே பயிரை மேயும்’ இந்த செயல் தற்போது தான் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது. சூழ்நிலை காரணமாக அவர்கள் சட்டவிரோதமாக குடியேறினாலும், குறைந்தபட்சம் அவர்கள் மனிதர்களாகவாவது நடத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.