Home நாடு சுவீடனில் நடைபெறும் உணவு மாநாட்டில் டாக்டர் சுப்ரா பங்கேற்பு!

சுவீடனில் நடைபெறும் உணவு மாநாட்டில் டாக்டர் சுப்ரா பங்கேற்பு!

642
0
SHARE
Ad

ஸ்டோக்ஹோம், ஜூன் 2 – மலேசிய சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் நேற்று ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று 2ஆம் தேதி வரையில் சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெறுகின்ற 2015ஆம் ஆண்டுக்கான உணவு தொடர்பான கருத்துக்கள (Annual EAT Stockholm Food Forum) மாநாட்டில் பங்கேற்று வருகின்றார்.

Dr Subra at Sweden Conference

உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் உணவு, சுகாதாரம், சுற்றுச்சூழல் என மூன்று குழுவாக இந்த 2015ஆம் ஆண்டுக்கான மாநாட்டில் கலந்து கொள்வார்கள். இந்தக் கருத்துக்களத்தில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் 2050ஆம் ஆண்டுக்கான உணவு திட்டத்தின் இலக்கு வரையறை ஆகியவற்றையும் விவாதிக்கவுள்ளனர்.Dr Subra with Norway PM

#TamilSchoolmychoice

மாநாட்டில் கலந்து கொண்ட நோர்வே நாட்டு பிரதமர் எர்னா சோல்பெர்க்குடன் டாக்டர் சுப்ரா

இக்கருத்துக்களத்தில் சுவீடன் நாட்டுப் பிரதமர் ஸ்டீவன் லொவ்வென், நோர்வே நாட்டுப் பிரதமர் எர்னா சொல்பெர்க் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவை ஆற்றவுள்ளனர். இவர்களுடன் சுவீடன் நாட்டு இளவரசியும் கலந்து கொள்ளவிருக்கின்றார். கடந்த ஆண்டு இக்கருத்துக்களத்திற்கான சொற்பொழிவை அமெரிக்க நாட்டின் 42-வது ஜனாதிபதி பில் கிளிண்டன் அவர்கள் வழங்கிய வேளையில் உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் அவர்கள் முதல் கருத்துக்கள மாநாட்டில் கலந்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dr Subra with Sweden Princess

மாநாட்டில் கலந்து கொண்ட சுவீடன் நாட்டின் இளவரசி விக்டோரியாவுடன் டாக்டர் சுப்ரா

இவ்வாண்டு நடைபெறும் இக்கருத்துக்களத்திற்கு சுகாதார அமைச்சர் டாக்டர் சுப்ரா  “பொருளாதார மேம்பாட்டிற்கு உணவு ஒரு முக்கிய பங்கு” எனும் தலைப்பில் கருத்து பகிர முக்கிய பேச்சாளராக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டாக்டர் சுப்ராவுக்கு கிடைத்திருக்கும் இந்த அழைப்பானது மலேசிய சுகாதார அமைச்சுக்கும், மலேசியாவில் வாழும் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் ஓர் அமைச்சருக்கும் கிடைத்திருக்கும் முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகின்றது.

இக்கருத்துக்களத்தில் அமைச்சர் டாக்டர் சுப்ரா :-

  1. ஆரோக்கியமான உணவு முறைமை, உணவு மேம்பாடு ஆகியவற்றுக்கு அடிப்படையாக இருக்கும் உணவு, விவசாயம், சுகாதாரம் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பு;
  2. சிறிய அளவிலான விவசயாத்தைப் பெரிய அளவில் கையாளுதல்;
  3. ஊட்டச்சத்து உற்பத்தியின் விளைவுகள்;
  4. நாட்டில் உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பினைக் கையாள்வது குறித்து கருத்து பகிர்தல்;
  5. விவசாயத்தின் வழி ஊட்டச்சத்தினை மேம்படுத்துதல்;

ஆகியவற்றை முக்கிய அம்சங்களாக தமது சொற்பொழிவில் பகிரவிருக்கின்றார் என அவரது அமைச்சு பத்திரிக்கைக் குறிப்பு தெரிவித்துள்ளது.

மேலும், “பொருளாதார மேம்பாட்டிற்கு உணவு ஒரு முக்கிய பங்கு” எனும் தலைப்பில் நடைபெறவிருக்கும் கலந்துரையாடலில் டாக்டர் சுப்ரா நிபுணர் குழுவில் ஒருவராகவும் இடம்பெறவுள்ளார். மேலும், உலக சுகாதார அமைப்பின் உறுப்பினர்கள், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடல் குழுவில் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.