கோலாலம்பூர், ஜூன் 2 – மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 10 இயங்குதளம் எதிர்வரும் ஜூலை மாதம் 29-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத புதுமையாய், மைக்ரோசாப்ட் இந்த இயங்குதளத்தை இலவசமாக வெளியிட இருக்கிறது. எனினும், இந்த இயங்குதளம் அனைவருக்கும் இலவசமா அல்லது பைரேட் பதிப்பு அல்லாமல் உண்மையான பதிப்புகளை வைத்திருக்கும் மைக்ரோசாப்ட் பயனர்களுக்கு மட்டும் இலவசமா என்பது இன்னும் தெளிவாக விளக்கப்படவில்லை.
இது பற்றி அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரியான டெர்ரி மையர்சன் நேற்று தனது வலைப்பதிவில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் ஜூலை 29-ம் தேதி முதல் பயனர்கள் விண்டோஸ் 10 இயங்குதளத்தை தங்கள் கணினியில் இலவசமாக மேம்படுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “இதுவரை விண்டோஸ் 10-ன் சோதனைப்பதிப்பை 4 மில்லியன் பயனர்கள் உபயோகித்துள்ளனர்.அவர்களிடம் இருந்து இதுவரை நேர்மறையான கருத்துக்களே வந்துள்ளன. வரும் ஜூலை இறுதியில் விண்டோஸ் 10 வெளியாவதால், பயனர்கள் இப்போதே தங்கள் இயங்குதளத்திற்கான முன்பதிவை தொடங்கலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.