கொழும்பு, ஜூன் 2 – என்ஜிஓ நிறுவனத்தின் நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் இலங்கை முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மனைவி சிராந்தி ராஜபக்சேவிடம் இன்று போலீஸார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பொருளாதாரக் குற்றம் தொடர்பான புலனாய்வுத் துறையினர் இந்த விசாரணையை நடத்தினர். இந்த விசாரணையின் போது, தனது என்ஜிஓ நிறுவனம் மூலம், வெளிநாடுகளிலிருந்து சமூக பணிகளுக்காகவே நிதி பெற்றதாகவும், இதை வெளிப்படையாகவே தான் பெற்றதாகவும் சிராந்தி ராஜபக்சே தெரிவித்தாராம்.
இந்த என்ஜிஓ நிறுவனத்தின் பெயர் ‘கார்ல்டன் சிரிலியா சவியா பவுண்டேஷன்’ என்பதாகும். ராஜபக்சே அதிபராக இருந்த காலத்தில் இது நடத்தப்பட்டு வந்தது. இந்த நிறுவனம் பெருமளவில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக சிறிசேன அரசு வழக்குப் போட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் காப்பாளராக சிராந்தி ராஜபக்சே இருந்து வருகிறார். இந்த வழக்கு அரசியல் ரீதியாக பழிவாங்கப் போடப்பட்ட வழக்கு என்று ஏற்கனவே ராஜபக்சே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.