புதுடெல்லி, ஜூன் 2 -ஆந்திர தெலங்கானா மாநிலங்களில் வெயிலின் தாக்கத்தால் நேற்று (திங்கள்கிழமை) வரை 2,304 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து ஆந்திர மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரி கூறுகையில்;
“திங்கள்கிழமை இரவு நிலவரப்படி, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அனல் காற்று பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,719-ஆக உயர்ந்துள்ளது” என்றார். இதில், அதிகபட்சமாக பிரகாசம் மாவட்டத்தில் 333 பேரும், குண்டூர் மாவட்டத்தில் 237 பேரும் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக ஐதராபாத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது: குண்டூர் உள்பட ஆந்திரப் பிரதேசத்தின் கடலோர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை கடுமையாக அனல் காற்று வீசியது.
அதிகபட்ச வெப்பநிலையாக, ஜங்கமங்கேஸ்வரபுரத்தில் 45 டிகிரி செல்சியஸ் பதிவானது என்று தெரிவித்தது. இதற்கிடையில், தெலங்கானா மாநிலத்தில் அனல் காற்று பாதிப்பால் கடந்த சனிக்கிழமை வரை 585 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தெலங்கானா மாநில பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் ஆணையர் சதா பார்கவி திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
“சனிக்கிழமை நிலவரப்படி, அனல் காற்று பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 585 பேர் என்று தகவல் கிடைத்துள்ளது. எனினும், கடந்த இரண்டு நாள்களாக உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வரவில்லை. கோடை காலம் காரணமாகவே உயிரிழப்புகள் ஏற்பட்டதாக முதல்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன”.
இதனிடையே அடிலாபாத், நிஜாமாபாத் மாவட்டங்களில் அதிகபட்சமாக 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமை நிலவியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.