வாஷிங்டன், ஜூன் 2 – முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வழக்கை கையாள்வதில் மலேசியா மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும், அவ்வழக்கால் ஜனநாயகத்தில் ‘உறையவைக்கும் அதிர்வுகள்’ ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்று தென்கிழக்கு அசிய நாடுகள் கூட்டமைப்பைச் சேர்ந்த இளம் தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்திய ஒபாமா, மலேசியாவின் முன்னாள் துணைப்பிரதமர் அன்வார் இப்ராகிமின் வழக்கு குறித்து விசாரித்தார்.
பின்னர் அது குறித்து ஒபாமா கூறுகையில், “மலேசியாவிற்கு ஜனநாயகத்திற்கென்று ஒரு வரலாறு உள்ளது. அது பாதுகாக்கப்பட வேண்டும்”
“மக்கள் செல்வாக்குமிக்க ஒரு எதிர்கட்சித்தலைவர் குற்ற வழக்கில் தண்டனை பெறுகின்றார் என்றால், எந்த வகையில் தீர்ப்பளிக்கப்பட்டது, விசாரணை எந்த அளவு வெளிப்படையாக இருந்தது, ஆதாரங்கள் எந்த அளவு தெளிவாக இருந்தது, அவ்வழக்கு எந்த வகையில் ஆராயப்பட்டது போன்றவை மிகவும் முக்கியம்”
“சட்டப்பூர்வத் தன்மை கேள்விக்குறியாக்கப்படும் சூழ்நிலை வருமானால், அது ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கும் பாதகமான விளைவை ஏற்படுத்திவிடும்” என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
தனது முன்னாள் உதவியாளரை ஓரினப்புணர்ச்சிக்கு உட்படுத்தியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு முன்னாள் துணைப்பிரதமரும், எதிர்கட்சித்தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடந்த பிப்ரவரி சிறையில் அடைக்கப்பட்டார்.
அன்வாருக்கு வழங்கப்பட்டுள்ள 5 ஆண்டுகள் சிறை தண்டனை, 68 வயதான அவரின் அரசியல் வாழ்க்கையை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
“உங்களுடன் உடன்படாத மக்களின் உரிமைகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும், காரணம் ஜனநாயகம் நீண்ட காலம் நிலைத்து நிற்பதற்கு அதைத் தவிர வேறு வழியில்லை” என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.