புதுடெல்லி, ஜூன் 2 – காங்கிரஸ் ஆட்சி சீர்குலைத்த இந்தியாவின் மதிப்பை உயர்த்தவே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார். மோடி அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி அவர் செய்தியாளர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அவரிடம் கடந்த ஓராண்டில் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது ஏன்? என்று கேட்கப்பட்டது. அப்போது, முதல் முறையாக மோடி தனது தொடர் வெளிநாட்டு பயணம் பற்றி மனம் திறந்து பேசினார்.
இது குறித்து மோடி கூறியதாவது:- “ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் வெளிநாடுகளில் இந்தியாவின் மீதான மதிப்பு சீர்குலைந்து போய் இருந்தது. இதனால் வெளிநாடுகளுடன் தொடர்பு கொள்வதே சவாலானதாகி விட்டது”.
“தனது ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி உலகநாடுகளுக்கு தெரியாது என்று காங்கிரஸ் நினைத்தால், அதைப்போல் தவறான விஷயம் வேறில்லை. எனவே, நான் என்னபேசுகிறேன் என்பதைப் பற்றி கவலைப்படாமல் காங்கிரஸ் தனது ஊழல்களுக்காக வெட்கப்படவேண்டும்”.
“உலக நாடுகள் இந்தியாவிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கின்றன. பிரிக்ஸ் நாடுகள் உலக பொருளாதாரத்தை இந்தியா உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்த்தன. ஆனால் விரைவிலேயே பிரிக்ஸ் நாடுகள் இந்தியாவை பலவீனமாக பார்க்கும் நிலை உருவானது”.
“இதுபோன்ற சவாலான கால கட்டத்தில்தான் நான் பிரதமராக பதவி ஏற்றேன். இந்த உலகம் எனக்கு புதிதான ஒன்று. அதுபோலவே இந்த உலகத்துக்கும் நான் புதிது. எனவே இந்தியாவின் மீது உலக நாடுகள் கொண்டிருந்த பார்வையை மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது”.
“இதை ஒரு பெரிய சவாலாகவே ஏற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்கு பயணம் செல்கிறேன். இந்தியாவிற்கான வாய்ப்புகள் பற்றி வெளிநாடுகளுடன் சம அந்தஸ்து அடிப்படையில் பேசுகிறேன். தற்போது இந்தியாவை உலக நாடுகள் மிகவும் திருப்தியான முறையில் பார்க்கத் தொடங்கி இருக்கின்றன”.
“இது எனது அரசின் கொள்கைகளுக்கும், உத்திகளுக்கும், நான் சார்ந்த கட்சிக்கும், 125 கோடி மக்கள் அளித்த உறுதியான தேர்தல் தீர்ப்புக்கும் கிடைத்த பெருமை”.
“யோகா கலையை போற்ற அனைத்துலக தினம் கொண்டாடப்படவேண்டும் என்ற இந்தியாவின் பரிந்துரையை ஐ.நா. சபை ஏற்றுக்கொண்டு ஜூன் 21-காஅம் தேதியை அனைத்துலக யோகா தினமாக அறிவித்திருப்பதும் திருப்தியான ஒன்றாகும்” என மோடி கூறினார்.