Home நாடு தடுப்பு முகாம்களை சுற்றுலா தலங்களாக்குவதா? – ஷாஹிடானுக்கு சிவராஜா கண்டனம்

தடுப்பு முகாம்களை சுற்றுலா தலங்களாக்குவதா? – ஷாஹிடானுக்கு சிவராஜா கண்டனம்

601
0
SHARE
Ad

Sivarraajhகோலாலம்பூர், ஜூன் 3 – வாங் கெலியானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதக்கடத்தல் தடுப்பு முகாம்களை சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம் கூறியிருப்பதற்கு மஇகா இளைஞர் பிரிவு தலைவர் சிவராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஷாஹிடான் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பேசியிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

“மலேசியாவுக்கு கடத்தி வரப்பட்ட அகதிகளின் மன வலியுடனும், துயரத்துடனும் தொடர்புடைய இத்தகைய அராஜகமான பரிந்துரைகளை ஓர் அரசாங்கம் எவ்வாறு பரிசீலிக்க முடியும்? இதுபோன்ற முட்டாள்தனமான யோசனைகளை எப்படி ஒரு மனிதரால் முன்வைக்க முடிகிறது?” என்று சிவராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஷாஹிடான் முன்வைத்துள்ள பரிந்துரை மஇகா இளைஞர் பிரிவுக்கு கடும் அதிர்ச்சியளித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அகதிகளின் உணர்வுகளை அனைவரும் மதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“சித்ரவதையும் கொடூரங்களும் நிகழ்ந்த இடங்கள் சுற்றுலா தலங்களாக மாற்றப்படக் கூடாது. அமைச்சர் கூறிய கருத்தை மஇகா இளைஞர் பிரிவு ஏற்க மறுக்கிறது. மாறாக மனிதக் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கடும் நடவடிக்கைகளை அதிகப்படுத்துவது நல்லது.

“அரசாங்கமும், அமலாக்க அதிகாரிகளும் மனது வைத்தால் மனிதக் கடத்தலை துடைத்தொழிக்க முடியும். சித்ரவதைக் கூடங்களாகச் செயல்பட்ட அந்த முகாம்கள் நினைவிடங்களாக மாற்றப்பட வேண்டும். இதன் மூலம் அகதிகள் அனுபவித்த மனிதநேயமற்ற செயல்களும், கொடூரங்களும் அனைவருக்கும் நினைவூட்டப்படும். இத்தகைய நடவடிக்கையே காயமடைந்தவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் மரியாதை செலுத்துவதாக அமையும். மற்ற நடவடிக்கைகள் அருவெறுப்பானதாகவே அமையும்,” என சிவராஜா மேலும் கூறியுள்ளார்.