சென்னை,ஜூன் 3- ஊட்டி மலைக்கு உல்லாசப் பயணம் செய்ய 15 பெட்டிகளுடன் புதிதாக இரண்டு தொடர் வண்டிகள் (ரயில்கள்) வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எஃப் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையின் பொது மேலாளர் அசோக்குமார் அகர்வால் இதுபற்றிக் கூறியதாவது:
“ஊட்டி மலைப் பயணம் என்பது அனைவரையும் கவர்ந்த ஒன்றாகும்.அதிலும்,ஊட்டி மலைக்குத் தொடர் வண்டியில் செல்வதென்பது மிகவும் சுகமான அனுபவமாகும்.
ஊட்டி மலை வழித்தடத்தில் சென்ற தொடர்வண்டிகள் மிகவும் பழையதாகிவிட்டன.எனவே,பயணிகளின் அனுபவத்தை மேலும் சுகமானதாக ஆக்க புதுப்பொலிவுடன் நவீன வடிவங்களில் இரண்டு தொடர் வண்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள தொடர் வண்டிப் பெட்டிகளில் உயிரி-கழிவறைகள் வசதி செய்யப்பட்டிருக்கும்;எல்.ஈ.டி.விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும்:அதோடு இன்றைய தேவை அறிந்து கைபேசி மின்நிரப்பி(charger) பொருத்தும் வசதிகளும் செய்யப்பட்டிருக்கும்.பயணிகள் அனைவரையும் கவரும் அனைத்து அம்சங்களும் இதில் இடம்பெற்றிருக்கும்” என்றார்.
மேலும்,இந்தியன் தொடர் வண்டி உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் காஷ்மீர் அரசுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இயக்குவதற்காகச் சுற்றுலா பயணிகளைக் கவரும் வண்ணம் மேற்கூரைகள் கண்ணாடியால் செய்யப்பட்ட தொடர் வண்டிகளைத் தயாரிக்குமாறும் ஆணையிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.